பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 243


58/4. திருக்கழிப்பாலை


     சோழநாட்டு (வடகரை)த் தலம்.

     திருநெல்வாயிலுக்கு (சிவபுரிக்கு) மிகவும் அருகாமையில் 1/2 கி.மீ.ல்
உள்ளது. பாடல் பெற்ற காலத்திலிருந்த பழைய கோயில் தில்லைக்குத்
தெற்கில் 11 கி.மீ. தொலைவில் திருக்கழிப்பாலை என்ற இடத்தில்
இருந்ததாகவும் அது கொள்ளிட நதியால் கொள்ளப்பட்டமையின், இங்கு
அமைக்கப்பட்டதென்றும் சொல்லப்படுகிறது. சிறிய கோயில். கோயில் வரை
வாகனத்தில் செல்லலாம். வால்மீகி முனிவர் வழிபட்ட தலம்.

     இறைவன் - பால்வண்ண நாதேஸ்வரர்.
     இறைவி - வேதநாயகி.
     தலமரம் - வில்வம்.
     தீர்த்தம் - கொள்ளிடம்.

     மூவர் பாடல் பெற்ற கோயில்.

     பழைய - சிறிய கோயில். சுற்று மதிற்சுவர் கிலமாகியுள்ளது.
ராஜகோபுரம் மூன்று நிலைகளையுடையது. வாயிலின் இருபுறங்களிலும்
அதிகார நந்தியர் துணைவியருடன் தரிசனம் தருகின்றனர். கொடிமரம்
ஏதுமில்லை. பிராகாரத்தில் சூரியன், விநாயகர், கிராதமூர்த்தி, மகாவிஷ்ணு,
சுப்பிரமணியர், மகாலட்சுமி, நவக்கிரகம், காலபைரவர், சந்திரன் சந்நிதிகள்
உள்ளன.

     வலம்முடித்துப் படிகளேறி மண்டபத்துள் சென்றால் அழகிய
முத்திரைகளோடு - ஒன்று வலக்கைச் சுட்டுவிரலைச் சுட்டிச் சாய்த்தும் ;
மற்றது வலக்கையை மேலுயர்த்தியும் - விளங்குகின்ற துவாரபாலகர்களைத்
தரிசிக்கலாம். அம்பாள் சந்நிதி வலப்பால் உள்ளது.

     தெற்கு நோக்கிய தரிசனம் - நின்ற திருமேனி. நடராசசபையில்
சிவகாமியின் திருமேனி. தோழியர் இருவர் சூழ ஒரே பீடத்தில்
அமைந்துள்ளது.

    
துவார விநாயகரை, தண்டபாணியைத் தொழுது உட்சென்றால் மூலவர்
தரிசனம். பெயருக்கேற்ப வெண்ணிறமாக உள்ளது. மிகச் சிறிய பாணம்.
மேற்புறம் சதுரமாக, வழித்தெடுத்தாற்போல் நடுவில் பள்ளத்துடன் இலிங்கத்
திருமேனி காட்சி தருகின்றது. அதிசயமான அமைப்பு. அபிஷேகத்தின்போது
பால் மட்டும்தான் இப்பள்ளத்தில் தேங்கும். மற்ற அபிஷேகங்கள்
அனைத்தும் ஆவுடையாருக்குத்தான்.