பக்கம் எண் :

276 திருமுறைத்தலங்கள்


                                          -அருகாத
     கார்காழில் நெஞ்சக் கவுணியர்க்குப் போதமருள்
     சீர்காழி ஞானத் திரவியமே.           (அருட்பா)


அஞ்சல் முகவரி :-

     அ/மி. பிரமபுரீஸ்வரர் திருக்கோயில்
     அ/மி. சட்டைநாத சுவாமி தேவஸ்தானம்
     சீர்காழி & அஞ்சல் - 609 110
     சீர்காழி வட்டம் - நாகப்பட்டினம் மாவட்டம்.

69/15. திருக்கோலக்கா

     சோழநாட்டு (வடகரை)த் தலம்.

     சீர்காழிக்குப் பக்கத்தில் 1 கி.மீ. தொலைவில் உள்ளது. பெரிய கோயில்.
திருத்தாளமுடையார் கோயில் என்றழைக்கப்படுகிறது. ஞானசம்பந்தரின்
யாத்திரையில் இதுவே முதல்தலம். கைகொட்டிப் பாடிய ஞானசம்பந்தருக்கு
இறைவன், திருவைந்தெழுத்து பொறித்த தாளத்தையருள, அதற்குத்
தெய்விகஓசையை இறைவி தந்து அருள்செய்த தலம். கோயில்வரை
வண்டிகள் செல்லும். சற்றுகுறுகலான பாதை.

     இறைவன் - சப்தபுரீஸ்வரர், தாளேஸ்வரர், திருத்தாளமுடையார்
     இறைவி - தொனிப்ரதாம்பாள், ஓசை கொடுத்த நாயகி.
     தலமரம் - கொன்றை, தீர்த்தம் - ஆனந்த தீர்த்தம். கோயிலின்
              எதிரில் உள்ளது.

     அகத்தியர், கண்வர் முதலியோர் வழிபட்டது. சம்பந்தர், சுந்தரர்
பாடல் பெற்றது.
(திருவருளைப் பெற்ற ஞானசம்பந்தர் அன்றைய மறுநாள்
சென்று தோணியப்பரைத் தொழுது அங்கிருந்தும் கோலக்கா எழுந்தருளினார்.
ஆரூர் வருமாறு பணித்த இறைவன் கட்டளையை மேற்கொண்ட சுந்தரர்
தில்லையிலிருந்து புறப்பட்டுச் சீர்காழியை மிதிக்க அஞ்சி (சம்பந்தரின்
அவதாரத் தலமாதலின்) எல்லையில் வலமாகவந்து தோணியப்பரைத்
தொழுது அங்கிருந்து திருக்கோலக்கா சென்று தொழுது பின்பு திருப்புன்கூர்
வழியே பயணம் தொடர்ந்தார்.)