பக்கம் எண் :

290 திருமுறைத்தலங்கள்


73/19. திருநின்றியூர்

     சோழநாட்டு (வடகரை)த் தலம்.

     வைத்தீஸ்வரன்கோயில் - மயிலாடுதுறை சாலையில் இடையில் உள்ள
ஊர். மயிலாடுதுறையிலிருந்து 7 கி.மீ. தொலைவு. மக்கள் வழக்கில்
திருநின்றியூர் என்றும், கொச்சை வழக்கில் திருநன்றியூர் என்றும்
வழங்குகிறது. (திருநின்றவூர் என்பது வேறு. தொண்டை நாட்டில் உள்ளது.)

     மன்னன் ஒருவன் கோயிலைக் கட்டும் விருப்புடன் இங்கு வந்து
பூமியை இடித்துப் பார்த்தபோது குருதி பீறிட, தோண்டிப் பார்க்கையில்
சிவலிங்கம் இருப்பதைக் கண்டு, கோயிலைக் கட்டினான் என்பது தலவரலாறு.
இடித்த இடி, பட்டமையால் இன்றும் சிவலிங்கத்தின் மீது உச்சியில் குழி
இருப்பதைக் காணலாம்.

     பழைய நாளில் இதுவும் கோச்செங்கணான் கட்டிய மாடக்கோயில்களுள்
ஒன்றாக விளங்கியது. நூறு ஆண்டுகளுக்குமுன் நகரத்தார் திருப்பணி
செய்தபோது இதை இப்போதுள்ள அமைப்பில் மாற்றிக் கட்டிவிட்டதாகச்
சொல்லப்படுகிறது. இலக்குமி, பரசுராமர், அகத்தியர் வழிபட்ட தலம். இஃது
தருமையாதீனக் கோயில்.

     இறைவன் - மகாலட்சுமீசர், லக்ஷ்மிபுரீஸ்வரர்
     இறைவி - லோகநாயகி
     தலமரம் - விளாமரம்.
     தீர்த்தம் - இலட்சுமி தீர்த்தம்.

     மூவர் பாடல் பெற்றது. பழைய கோயில். ராஜகோபுரம் மூன்று
நிலைகளையுடையது. விசாலமான உள்இடம். கொடிமரம் இல்லை. பலிபீடம்
நந்தியும் கொடிமரத்து விநாயகரும் உளர்.

     பிராகாரத்தில் செல்வப் பிள்ளையார் சந்நிதியுள்ளது. பரசுராமர்
வழிபட்ட லிங்கமும், சுப்பிரமணியர் நால்வர், மகாலட்சுமி சிலாரூபங்கள் ஒரே
சந்நிதியில் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன. அடுத்து நவக்கிரக சந்நிதியும்,
பைரவர், சந்திரன் உருவங்கள் ஒரு சந்நிதியில் உள்ளன. வலம்முடித்து,
துவார விநாயகரையும் தண்டபாணியையும் வழிபட்டுத் துவாரபாலகர்களைத்
தொழுது, உட்சென்றால் நேரே சுவாமி சந்நிதியும் வலப்பால் அம்பாள்
சந்நிதியும் உள்ளன.