பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 303


வேண்டினான். இறைவன் அப்பெண்ணை ஒருபூதத்தின்மூலம் கொண்டுவந்து
அவனுக்குத் திருமண வேள்வி செய்தருளியதாக வரலாறு சொல்லப்படுகிறது.

     திருக்கோயில் ஊர் நடுவே உள்ளது. கோபுரம் கிழக்கு நோக்கியது.
கர்ப்பக்கிரகம் அர்த்தமண்டபம் மகாமண்டபம் உள்ளன. கோஷ்ட
மூர்த்தங்களாக இலிங்கோற்பவரும், அர்த்தநாரீஸ்வரரும், சந்திரசேகரரும்,
தட்சிணாமூர்த்தியும் உள்ளனர். அர்த்த மண்டபத்தில் அகத்தியர் சிலையும்,
நடராசர், பிள்ளையார் திருமேனிகளும் உள்ளன. முதல் பிராகாரத்தில்
அம்பாள் கோயில் தெற்கு நோக்கியுள்ளது. இதன்பின் புறத்தில் ஈசானமூர்த்தி
கோயில் உள்ளது. இக்கோயில் முதற்பராந்தக சோழன் காலத்தில்
கட்டப்பட்டதென்பர். கல்வெட்டுக்களில் இறைவன் பெயர் மணவாளநம்பி,
மங்கலநாதர், திருவேள்விக்குடி உடையார் என்னும் பெயர்களால்
குறிக்கப்பட்டுள்ளது.

     “புரிதரு சடையினர் புலியுரி யரையினர் பொடியணிந்து
      திரிதரு மியல்பினர் திரிபுர மூன்றையுந் தீவளைத்தார்
      வரிதரு வனமுலை மங்கையொ டொருபக லமர்ந்த பிரான்
      விரிதரு துருத்தியாரிர விடத்துறைவர் வேள்விக்குடியே.”
                                              (சம்பந்தர்)

    “பேருமோர் ஆயிரம் பேருடையார் பெண்ணோ டாணும் அல்லர்
     ஊரும தொற்றியூர் மற்றையூர் பெற்றவா நாம் அறியோம்
     காருங் கருங்கடல் நஞ்சமுதுண்டு கண்டங் கறுத்தார்க்(கு)
     ஆரம் பாம்பாவதறிந்தோமேல் நாமிவர்க் காட்படோமே”
                                                (சுந்தரர்)

                                      -மன்னர்சுக
      வாழ்விக்குடிகளடிமண் பூசலாலென்னும்
      வேள்விக்குடி யமர்ந்த வித்தகனே.           (அருட்பா)


அஞ்சல் முகவரி :-

     அ/மி. கல்யாண சுந்தரேசுவரர் திருக்கோயில்
      திருவேள்விக்குடி - குத்தாலம் அஞ்சல்
      குத்தாலம் R.M.S. - 609 801
      மயிலாடுதுறை வட்டம் - நாகப்பட்டினம் மாவட்டம்.