சோழநாட்டு (வடகரை)த் தலம். சிதம்பரம் - காட்டுமன்னார் கோயில் (காட்டுமன்னார்குடி) சாலையில், குமராட்சியை அடுத்து, சாலையில் திருநாரையூர் 1 கி.மீ. என்று கைகாட்டி உள்ள இடத்தில் அதுகாட்டும் பாதையில் (இடப்புறமாக) சென்றால் தலத்தையடையலாம். சிதம்பரத்திலிருந்து 16 கி.மீ. சாலையில் சிமெண்ட் பெயர்ப்பலகையும் உள்ளது. சற்று குறுகலான பாதை. கோயில்வரை செல்லலாம். துர்வாசருடைய தவத்திற்கு இடையூறுசெய்த காந்தருவன் ஒருவன் சாபத்தால் நாரையாகி வழிபட்ட தலம். நம்பியாண்டார் நம்பிகள் அவதரித்த தலம். இங்குள்ள பொல்லாப் பிள்ளையாரின் அருளைக் கொண்டு இவர், தில்லையில் சேமித்து வைத்திருந்த தேவாரத் திருமுறைகளை உலகிற்கு வெளிப்படுத்தினார். இறைவன் - சௌந்தரநாதர் இறைவி - திரிபுரசுந்தரி. தலமரம் - புன்னாகம். தீர்த்தம் - காருண்ய தீர்த்தம். (கோயிலுக்கு எதிரில் உள்ளது.) சம்பந்தர், அப்பர் பாடல் பெற்றது. கிழக்கு நோக்கிய திருக்கோயில். முகப்புவாயிலைக் கடந்ததும் உள்இடம் விசாலமாகவுள்ளது. நந்திமண்டபம்- கொடிமரத்து விநாயகர் உள்ளார். கொடிமரமில்லை. வலப்பால் அம்பாள் சந்நிதி. உள்கோபுரம் மூன்று நிலைகளை உடையது. உள் முகப்பு வாயிலின் மேற்புறம் ரிஷபாரூடர் வண்ணச் சுதையில் அழகுறக் காட்சி தருகிறார். நேரே மூலவர் சந்நிதி தெரிகிறது. உட்பிராகாரத்தில் வலமாக வரும்போது சந்தானாசாரியர் சந்நிதி உள்ளது. அடுத்திருப்பது நால்வருடன் சேக்கிழாரும், அகத்தியரும், பகமுனிவரும் ஒரு சேரசிலாரூபத்தில் எழுந்தருளியுள்ள சந்நிதி. அடுத்த தரிசனம் இத்தலத்திற்குச் சிறப்பாகவுள்ள பொல்லாப் பிள்ளையார் சந்நிதியாகும். இதைச் சுயம்பிரகாசர் சந்நிதி என்றும் அழைக்கின்றனர். (பொள்ளல் - உளி கொண்டு செதுக்குதல். இவ்வாறு செதுக்கப்படாமல் தானே தோன்றியவர். பொள்ளலில்லாப் பிள்ளையார் பொல்லாப்பிள்ளையார் என்றாகி விட்டது.) சந்நிதிக்கு முன் மங்களூர் ஓடுவேயப் பெற்ற மண்டபம் உள்ளது. வலம்புரி விநாயகராகப் பிள்ளையார் தரிசனம் தருகின்றார். சந்நிதியில் உட்புறத்தில் திருமுறை கண்ட வரலாறு வண்ணப் படங்களாக வைக்கப்பட்டுள்ளன. நம்பியாண்டார் நம்பிகள், இராசராசன் ஆகியோரின் சிலாரூபங்கள் உள்ளன. அடுத்து சுப்பிரமணியர், கஜலட்சுமி, திருமூலநாதர் சந்நிதிகளும், தலமரமும் |