திருவுருவம் சற்று சாய்ந்துள்ளது. இதுபற்றிச் சொல்லப்படும் வரலாறு :- “இந்திரனின்தாய் இத்தலத்திறைவனை வழிபட்டு வந்தாள். அவள் முதுமை கருதி, எளிதாக வழிபட இந்திரன் குதிரைகளைப்பூட்டி, இக்கருவறையை இழுத்துச்செல்ல முற்பட்டபோது விநாயகரை வேண்ட மறந்தான். ஆகவே விநாயகர் வலக்காலை ஊன்ற, அது அசையாமல் அப்படியே நின்றுவிட்டது. தன்பிழை உணர்ந்த இந்திரன் கருவறை எடுத்துச் செல்லும் முயற்சியை விட்டு விட்டு இங்கு வழிபட்டு அருள்பெற்றான்.” விநாயகர் ஊன்றிய நிலையில் இருப்பதால் சந்நிதியில் விநாயகர் சற்றுச் சாய்ந்துள்ளார். சுப்பிரமணியர், நால்வர், மகாலட்சமி, துர்வாசர், பைரவர், சனிபகவான், சந்திரன், சூரியன் சந்நிதிகளும் பிராகாரத்தில் உள்ளன. கருவறைச்சுவரின் வெளிப்புறத்தில் அழகான சிற்பங்கள் உள்ளன. அவற்றுள் அம்பாளைத் தன்தொடை மீதிருத்தி ஆலிங்கன மூர்த்தியாகக் காட்சிதரும் சிற்பம் மிகவும் அழகாகவுள்ளது. நாடொறும் நான்கு காலவழிபாடுகள் நடைபெறும் இத்திருக்கோயிலில் பெருவிழா நடைபெறவில்லை. நவராத்திரி முதலிய விசேஷகாலங்கள் மட்டுமே நடைபெறுகின்றன. “வானமார் திங்களும் நீரும் மருவிய வார்சடையானைத் தேனமர் கொன்றையினானைத் தேவர் தொழப்படுவானைக் கானமரும் பிணை புல்கிக் கலைபயிலுங் கடம்பூரில் தானமர் கொள்கையினானைத் தாள்தொழ வீடெளிதாமே.” (சம்பந்தர்) ‘நங்கடம்பனைப் பெற்றவள் பங்கினன் தென் கடம்பைத் திருக்கரக் கோயிலான் தன்கடன் அடியேனையும் தாங்குதல் என்கடன் பணி செய்து கிடப்பதே.’ (அப்பர்)
- பாரில் உடம்பூர் பவத்தை யொழித்தருளு மேன்மைக் கடம்பூர் வாழ் என்இரண்டு கண்ணே. (அருட்பா) அஞ்சல் முகவரி :- அ/மி. அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் மேலக்கடம்பூர் & அஞ்சல் (வழி) ரெட்டியூர் காட்டுமன்னார்குடி வட்டம் - கடலூர் மாவட்டம் - 608 304. |