சோழநாட்டு (வடகரை)த் தலம். மக்கள் வழக்கில் தற்போது பந்தநல்லூர் என்று வழங்குகிறது. அம்பிகை ஆடியபந்து இறைவன் எற்ற, வந்து அணைந்த இடமாதலின் பந்தணைநல்லூர் எனப்பெயர் பெற்றது. கும்பகோணம் - பந்தநல்லூர் திருப்பனந்தாள் - பந்தநல்லூர் பேருந்து வசதி உள்ளது. குத்தாலத்திலிருந்தும் வரலாம். மயிலாடுதுறையிலிருந்து திருப்பனந்தாள் செல்லும் பேருந்து பந்தநல்லூர் வழியாகச் செல்கிறது. ஊரைத்தாண்டிச் சாலையோரத்தில் சற்று உள்ளடங்கிக் கோயில் உள்ளது. தென்கயிலை, கோவூர், கொன்றைவனம், விஷ்ணுபுரி, இந்திரபுரி, கண்வராச்சிரமம், வாலிநகர், பானுபுரி, ஆவூர், கந்துகபுரி என்பன இத்தலத்திற்குரிய வேறு பெயர்கள். காம்பீலி மன்னனின் மகன் குருடு நீங்கிய இடம். இதனால் இம்மன்னன் தன்மகனுக்குப் பசுபதி என்று பெயர் சூட்டியதோடு, திருக்கோயில் திருப்பணிகளையும் செய்து வழிபட்டதாக வரலாறு. இன்றும் திருக்குளம் இதன் தொடர்பாகக் காம்போச மன்னன் துறை என்றழைக்கப்படுகிறது. காமதேனு, திருமால், கண்வமகரிஷி, வாலி, இந்திரன், பிரமன், சூரியன் முதலியோர் வழிபட்ட தலம். இறைவன் - பசுபதீஸ்வரர் இறைவி - வேணுபுஜாம்பிகை, காம்பனதோளியம்மை தலமரம் - சரகொன்றை தீர்த்தம் - சூரியதீர்த்தம். கோயிலுக்கு எதிரில் நீராழி மண்டபத்துடன் உள்ளது. சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற தலம். ஊர் சிறியது. கோயில் நன்குள்ளது. காம்பீலிமன்னன் திருப்பணிகள் செய்து கட்டிய இக்கோயில் பிற்காலத்தில் சோழ மன்னர்களால் மேலும் திருப்பணிகள் செய்யப்பட்டன. இத்தலவரலாறு : உமாதேவி பந்துகொண்டு விளையாட விரும்பினாள். இறைவனும் நால்வேதங்களையே பந்துகளாக்கித் தந்துதவினார். உமாதேவி மிகவும் விருப்புடன் விளையாடிக் கொண்டிருந்தாள். அதற்கு இடையூறாக ஆகலாகாது என்றெண்ணிச் சூரியன் |