பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 335


     அஸ்தமிக்காதிருந்தான். காலநிலை மாறுவதுகண்டு தேவர்கள்
இறைவனிடம் முறையிட்டனர். இறைவனும் அவ்விடத்திற்கு வந்தார்.
அவரையும் கவனியாது உமை விளையாடினாள். அஃதறிந்த இறைவன்
கோபங்கொண்டு அப்பந்தைத் தன் திருவடியால் எற்றிட்டார். பந்தைக்
காணாத உமை, இறைவனிடம் வந்து வணங்க, அம்பிகையைப் பசுவாகுமாறு
சபித்தார். சாபவிமோசனமாக, அப்பந்து விழும்தலத்தில், கொன்றையின்கீழ்
தாம் வீற்றிருப்பதாகவும் அங்கு வந்து வழிபடுமாறும் பணித்தார். அவ்வாறே
திருமாலை உடன் ஆயனாக அழைத்துக் கொண்டு பசு உருவில்
(காமதேனுவாகி) கண்வர் ஆசிரமம் அடைந்து அங்கிருந்து வந்தார்.
அங்கிருக்கும் நாளில் புற்று உருவிலிருந்த இறைவன் திருமேனிக்குப் பால்
சொரிந்து வழிபட்டு வந்தார். ஆயனாக வந்த திருமால் நாடொறும்
கண்வமுனிவரின் அபிஷேகத்திற்குப் பால்தந்து வந்தார். ஒருநாள் பூசைக்குப்
பசுவிடம் பால் இல்லாமை கண்டு, சினமுற்றுப் பசுவின் பின்சென்று அது
புற்றில் பால் சொரிவதுகண்டு சினந்து பசுவைத் தன் கைக்கோலால் அடிக்க,
அப்பசுவும் துள்ளிட, அதனால் அதன் ஒருகாற் குளம்பு புற்றின்மீது பட -
இறைவன் ஸ்பரிசத்தால் உமாதேவி தன்சுயவுருவம் பெற்றுச் சாபம் நீங்கி
அருள் பெற்றார்.

     பசுவுக்குப் பதியாக வந்து ஆண்டுகொண்டமையால் சுவாமி பசுபதி
என்று பெயர் பெற்றார். இறைவன் எற்றிய பந்து வந்து அணைந்த
இடமாதலின் பந்தணைநல்லூர் என்று ஊர்ப் பெயருண்டாயிற்று. மூலவர் -
புற்று - சுயம்புமூர்த்தி. இதன் சிரசில் பசுவின் குளம்புச்சுவடு பதிந்திருப்பதை
இன்றும் காணலாம்.

    ராஜகோபுரம் ஐந்து நிலைகளுடன் காட்சி தருகிறது. கோயிலின் எதிரில்
திருக்குளம் உள்ளது. உட்சென்றால் விசாலமான மண்டபம். இடப்பால்
அம்பாள் சந்நிதியுள்ளது. பக்கத்தில் காளி சந்நிதி. வலப்பால் அலுவலகம்
உளது. கவசமிட்ட கொடிமரம் - விநாயகர். பக்கத்தில் சுவர் ஓரத்தில் இவ்வூர்க்
கோட்டையில் புதைந்து கிடந்து கண்டெடுக்கப்பட்ட பலரகமான குண்டுகள்
பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இவை சோழர் காலத்து யவனப் பொறிகளை
எறிவதற்காகச் சேகரித்த குண்டுகளாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
பிராகாரத்தில் சந்நிதிகள் எவையுமில்லை. முழுவதும் நந்தவனப் பகுதியே.
பக்கத்தில் உள்ள ஆதிகேசவப்பெருமாள்தான் உமையுடன் உடன் வந்தவர்.
தனிக்கோயிலாகப் பரிமளவல்லித் தாயாருடன் ஆதிகேசவப்பெருமாள்
வீற்றிருக்கின்றார். வலமாக வந்து நுழையும் சுவாமி சந்நிதி வாயிலுக்குத்
திருஞான சம்பந்தர் திருவாயில் என்று பெயர் எழுதப்பட்டுள்ளது.