பக்கம் எண் :

336 திருமுறைத்தலங்கள்


     இருபுறங்களிலும் தலப்பதிகங்கள் பதித்த கல்வெட்டுக்கள் உள.
வாயிலைக்கடந்தால் மகாமண்டபம். நடராசசபை. இடப்பால் வாகன அறை.
சற்று முன் சென்றால் வலப்பால் கல்யாணசுந்தரர் சந்நிதி. பீடத்தினடியில்
தலவரலாற்றுச் சிற்பம் - கொன்றையடியில் பசு புற்றில் பால் சொரிவது -
பசுவைக்கோலாச்சி அடிப்பது) தகட்டில் வைக்கப்பட்டு உள்ளது. பக்கத்தில்
இருபுறமும் துவாரவிநாயகர், சுப்பிரமணியர் சந்நிதிகள். பிராகாரத்தில் உள்ள
நால்வர் சந்நிதியில் ஞானசம்பந்தர் மட்டும் பேருருவில் உள்ளார். தொடர்ந்து
அறுபத்துமூவர் சிலாரூபங்கள் தரிசனம். சட்டநாதர் சந்நிதி வண்ணச்
சுதையில் அமைக்கப்பட்டுள்ளது. பிரமன், வாலி முதலியோர் வழிபட்ட
லிங்கங்களும் கஜலட்சுமி, அன்னபூரணி சந்நிதிகளும் உள்ளன. தலமரம்
சரக்கொன்றை உள்ளது. தலச்சிறப்பான சிலாரூபம் (பசு இலிங்கத்தின் மீது
பால்சொரிவது) உள்ளது. பைரவரை அடுத்து நவக்கிரகங்கள் அனைத்தும்
ஒரே வரிசையாகக் காட்சியளிக்கின்றன. இவற்றுக்கும் பக்கத்தில் சந்திரன்,
சூரியன், விநாயகர் உள்ளனர்.

     உள்வலம் முடித்து, துவாரபாலகரைக் கைகூப்பித்தொழுது உட்சென்றால்
பசுபதீஸ்வரர் தரிசனம். அர்த்த மண்டபத்தில் உற்சவ மூர்த்தங்கள்
வைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் பிட்சாடனமூர்த்தி மிகவும் அழகு. நேரே
மூலவர் - சுயம்பு. குட்டையான பாணம். சிரசின் மீது பசுவின் குளம்பு
அடையாளம் (பசுக்குளம்பு சேற்றில் படிந்தால் அந்த இடம் எப்படி
இருக்குமோ அதுபோல) உள்ளது. புற்றில் பால் சொரிந்து சொரிந்து
வெண்மையாகியதால் இலிங்கத் திருமேனி வெண்ணிறமாகவுள்ளது.
புற்றாதலின் குவளை (கவசம்) சார்த்தியே அபிஷேகம் செய்கின்றனர்.
அம்பாள் சந்நிதி வடக்கு நோக்கியது. அம்பாள் தவம் செய்யுங்
கோலமாதலின் இருபுறமும் ஐயனாரும் காளியும் காவலாகவுள்ளனர்.
மாசிமகத்தில் பெருவிழா நடைபெறுகிறது. நாடொறும் ஆறுகால வழிபாடுகள்.

     சுமார் 900 ஏக்கர் நிலமிருந்தும் கோயிலுக்குப் பயனின்றியுள்ளது.
வழிபாடு நடப்பதே சிரமமாகவுள்ளது. 20 ஆண்டுகளாகியும் குடமுழுக்குக்கு
வழியில்லை.

     சோழர், விசயநகரர் காலத்திய கல்வெட்டுக்களில் இத்தலத்திறைவன்
பசுபதிதேவர் என்றும்; முதலாம் இராசராசன் கல்வெட்டில் இத்தலம்
‘பந்தணைநல்லூர்’ என்றும் குறிக்கப்பெறுகின்றது. இங்குள்ள கல்வெட்டொன்று
முதலாம் இராசராசன் அரியணையேறிய 11ஆம் ஆண்டில் செம்பியன்மாதேவி,
ஒருவிளக்குப் பன்னிரண்டு கழஞ்சு