நாககன்னிகை, தாடகை, குங்கிலியக்கலய நாயனார் ஆகியோர் வழிபட்டுப் பேறு பெற்ற தலம். ஆலயத்துள் அலங்கார மண்டபம், தீர்த்தவாரி மண்டபம், வாகன மண்டபம், பதினாறுகால் மண்டபம் முதலியவை உள்ளன. ஊரின் நடுவில் ஆலயம், உயர் மதில்கள்சூழ, கீழும் மேலும் கோபுரங் கொண்டு சிறந்து விளங்குகிறது. அம்பாள் சந்நிதி கிழக்கு நோக்கியது. மேலைக் கோபுரவாயிலில் நுழைந்ததும் பதினாறுகால் மண்டபமும் அதன்பக்கம் வாகனமண்டபமும், நாககன்னிகை தீர்த்தமும் உள்ளன. இரண்டாம் கோபுரம் தாண்டியதும் அழகான வாகன மண்டபம். பஞ்சமூர்த்திகளின் சுதைச் சிற்பங்களும், குங்கிலியக்கலயர், சொக்க நாதர், நர்த்தன விநாயகர் சந்நிதிகளும் உள்ளன. நவக்கிரக மண்டபம் உள்ளது. ஆஸ்தான மண்டபத்தில் ஊர்த்துவதாண்டவ மூர்த்தி தரிசனம் தருகின்றார். சுவாமி கோயிலில் வடமேற்கில் சுப்பிரமணியர், நடராசசபை, முத்துக்குமாரசாமி (உற்சவர்) - இலக்குமி தரிசனம். கிழக்கில் பஞ்ச பூதலிங்கங்கள், பைவரர், சூரியசந்திரர் உள்ளனர். தென் பிராகாரத்தில் அறுபத்து மூவர் சந்நிதிகள், சப்தகன்னியர், உற்சவ மூர்த்திகள் எழுந்தருளியுள்ளனர். தல விருட்சத்தின் பக்கத்தில் உள்ள சிவலிங்கத்தையடுத்துள்ள கிணறு, நாககன்னிகை பிலம் எனப்படும். இதன் வழியாக நாககன்னியர் வந்து இறைவனை வழிபட்டதாக ஐதீகம் சொல்லப்படுகின்றது. கர்ப்பக்கிருகத்தில் தட்சிணாமூர்த்தியும், சண்டீசர் (ஆலயமும்), துர்க்கையும் காட்சி தருகின்றனர். சுவாமி விமானம் பிரணவவடிவில் மூன்று ஸ்தூபிகளுடன் விளங்குகிறது. அம்பாளின் சந்நிதியில் ஆடிப்பூர அம்மன் உள்ளார். பதினாறுகால் மண்டபத்தில் தாடகைக்காகப் பெருமான் வளைந்து கொடுத்ததும், குங்குலியக்கலயனார் பெருமானின் வளைவை நிமிர்த்தியதுமாகிய சிற்பங்கள் உள. ஆலயத்தில் காரண, காமிக ஆகம முறைப்படி, முறையாகப் பூஜைகள் நடைபெறுகின்றன. சித்திரையில் பெருவிழா, இத்திருக்கோயில் தருமையாதீனத்திற்குச் சொந்தமானது. இத்தலத்தில் தான் குமரகுருபர சுவாமிகள் நிறுவியுள்ள ஸ்ரீ காசிமடம் உள்ளது. காசியில் குமரகுருபரர் உண்டாக்கிய குமாரசாமி மடத்தின்வழி வந்த மடம் ஆதலின் ஸ்ரீ காசி மடம் என்று வழங்கப்படுகிறது. இம்மடத்தின் சார்பில் ‘செந்தமிழ்க் கல்லூரி’ ஒன்று நடைபெறுகின்றது. |