பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 351


எண்ணற்ற அருளறப் பணிகளைச் செய்து வரும் இத்திருமடம்
தருமையாதீனத்தின் சிஷ்ய பரம்பரையைச் சேர்ந்ததாகும். நாடொறும் நான்கு
காலபூஜைகள். திருப்பனந்தாளில் வாழ்ந்த நக்கன்தரணி என்பவனால்
இக்கோயில் கருங்கல்லால் கட்டப்பட்டது. கல்வெட்டில் இத்தலம் திருத்
தாடகை ஈச்சரம் என்றும் இறைவன் பெயர் தாடகேச்சரத்து மகாதேவர்
என்றும் குறிக்கப்படுகிறது. குங்குலியக்கலயநாயனாரின் கோயில், கோயிலின்
இரண்டாம் பிராகாரத்தில் மேற்கு கோபுரத்தின் தென்பாலுள்ளது.
இந்நாயனாரின் மனைவியின் பெயர் நீலாயி என்று கல்வெட்டு கூறுகிறது.

    “கண்பொலி நெற்றியினான் திகழ் கையிலொர் வெண்மழுவான்
      பெண்புணர் கூறுடையான் மிகு பீடுடை மால் விடை யான்
      விண்பொலி மாமதிசேர் திருசெஞ்சடை வேதியனூர்
      தண்பொலி சூழ்பனந்தாள் திருத்தாடகை யீச்சரமே.”
                                         (சம்பந்தர்)

     “கரம் ஊன்றிக் கண்இடுங்கிக் கால்குலைய மற்றோர்
      மரம் ஊன்றி வாய் குதட்டா முன்னம் - புரமூன்றும்
      தீச்சரத்தால் செற்றான் திருப்பனந்தாள் தாடகைய
      ஈச்சரத்தான் பாதமே ஏத்து.”
                                  - ஐயடிகள் காடவர்கோன்

    “கல்லா மனத்துக் கடையேனை ஆண்டு கருணை செய
     வல்லா யென்றுன் பதம் வந்தடைந்தேன் வினைமாற்றிடுவாய்
     செல்லாங்குழல் மலர்ச் செவ்வாய் வரைகுயச் சிற்றிடைசேர்
     நல்லாய் பனசை நகர் வாழ் பெரிய நன்னாயகியே.”
                                    (பெரியநாயகி மாலை)

                                            - தரும
     மனந்தான் மலரை மருவுவிப்போர் வாழும்
     பனந்தாளிற் பாலுகந்த பாகே.
                                       (அருட்பா)

அஞ்சல் முகவரி :-

     அ/மி. தாலவனேஸ்வரர் திருக்கோயில்
     திருப்பனந்தாள் - அஞ்சல் 612 504.
     கும்பகோணம் வட்டம் - தஞ்சை மாவட்டம்.