பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 367


101/47. திருவிசயமங்கை

திருவிஜயமங்கை

    சோழநாட்டு (வடகரை)த் தலம்.

    திருவைகாவூரிலிருந்து ஆற்றோரமாக - (இடப்பால் திரும்பி)ச் செல்லும்
கிளைப்பாதையில் 2 கி.மீ. சென்று இத்தலத்தை அடையலாம். அருச்சுனன் -
விசயன் வழிபட்ட தலம். ஆதலின் ‘விசயமங்கை’ எனப்படுகிறது.

     இறைவன் - விஜயநாதர்
     இறைவி - மங்களாம்பிகை - மங்கைநாயகி
     தீர்த்தம் - அருச்சுன தீர்த்தம். கோயிலுக்கு எதிரில் உள்ளது.

     சம்பந்தர், அப்பர் ஆகியோரின் பாடல் பெற்றது.

    ராஜகோபுரமில்லை. மிகவும் பழமையான கோயில். சற்று கிலமாகவும்,
பழுதடைந்தும் உள்ளது. மண்டப முகப்பு வாயில் கிழக்கு நோக்கியுள்ளது.
கொடிமரமில்லை. வாயிலில் நுழைந்து நேரே பார்த்தால் மூலவர் சந்நிதி
உள்ளது. கிழக்கு நோக்கிய சந்நிதி, மகாமண்டபம் கல்மண்டபம். ஒரு மூலையில் நவக்கிரக சந்நிதி உள்ளது. வெளிப் பிராகாரம் விசாலமானது. மூலவர் - கிழக்கு நோக்கிய சந்நிதி. அருச்சுனன் அம்பு பட்ட தழும்பு -
கோடு - சிவலிங்கத் திருமேனியில் கீற்று போல் உள்ளது. சதுர ஆவுடையார்,
அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியது - நின்ற நிலை.

     கோயிலின் செங்கல் கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது. பராமரிப்பார்
இலர். ஒருவேளை பூஜைமட்டுமே நடைபெறுகிறது. அதுவும் சிவாசாரியரின்
சொந்த முயற்சியால் நடைபெறுகிறது. சுவாமி, அம்பாள் விமானங்களில்
கலசங்களும் சுதையாலேயே அமைக்கப்பட்டுள்ளன. கோஷ்ட மூர்த்தமாகத்
தட்சிணாமூர்த்தி மட்டுமே காட்சி தருகிறார்.

    “மருவமர் குழலுமை பங்கர் வார்சடை
     அரவமர் கொள்கை எம் அடிகள் கோயிலாம்
     குரவமர் சுரபுன்னை கோங்கு வேங்கைகள்
     விரவிய பொழிலணி விசய மங்கையே.”          (சம்பந்தர்)