பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 371


சிட்டுக்குருவி வழிபட்டதால் சிட்டிலிங்கேஸ்வரர் என்றும் இறைவனுக்குப் பெயர்கள் ஏற்பட்டன.) தஞ்சை அரண்மனை இலாகாவுக்குச் சொந்தமான கோயில். பராமரிப்பின்றிக் கிடக்கின்றது.

     ஐந்து நிலை ராஜகோபுரம் - செங்கற்களே தெரிகின்றன. மிகப்
பழமையானது. வெளிப் பிராகாரத்தில் சந்நிதி ஏதுமில்லை. உள்ளே வலப்பால்
வாகனமண்டபம் சிதலமாகியுள்ளது. சுற்று மதில் முழுவதும் அழிந்துள்ளது.
சற்ற மேலே சென்றால் வலப்பால் அம்பாள் சந்நிதி. எதிரில் ரிஷபம்
உள்ளது. பின்னப்பட்ட பழைய அம்பாள் திருமேனியும் வாயில் முகப்பில்
வைக்கப்பட்டுள்ளது. உள்வாயிலைக் கடந்து பிராகாரத்தில் வந்தால் பலவேறு
மூர்த்தங்கள் வெட்ட வெளியில் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன.

     விநாயகர், சுப்பிரமணியர், கஜலட்சுமி, விசுவநாதர் சந்நிதிகளைத்
தொழலாம். விமானத்தில் வாலி வழிபடும் சிற்பமுள்ளது. இத்தலத்தில்
நடராசப் பெருமான் சிவகாமியுடன் மூலவராகக் காட்சியளிக்கின்றார்.
இது அற்புதமான தரிசனம். சனி, பைரவர், சூரியன், சந்திரன்
திருமேனிகள் உள்ளன. நால்வர் சந்நிதியில் மூவரேயுள்ளனர். இத்தலத்து
வரலாறான (கர்ப்பிணி) செட்டிப் பெண்ணின் உருவம் உள்ளது. உள்
வாயிலைத் தாண்டியதும் வலப்பால் நவக்கிரக சந்நிதி. மூலவர் - சற்று
குட்டையான பாணம் - தரிசிக்கின்றோம். இக்கோயிலில் கோஷ்டத்தில்
உள்ள அர்த்த நாரீஸ்வரர் வடிவம் மிகமிக அழகாகவுள்ளது - கண்ணுக்குப்
பெருவிருந்து. இக்கோயில் பராமரிப்பின்றி அழிந்து கொண்டிருக்கும்
நிலையைக் காணும்போது கண்ணீர் பெருகுகின்றது. என்றுதான் வருமோ
நற்காலம்? நாடொறும் நான்கு கால வழிபாடுகள். நடராசருக்கு மட்டும்
ஆண்டில் நடைபெற வேண்டிய ஆறு அபிஷேகங்களும் நடைபெறுகின்றன.
இவை நீங்கலாக எவ்விழாவும் நடைபெறவில்லை.

     இவ்வூரிலுள்ள 79 வயது நிரம்பிய திரு. கணேசஐயர் அவர்களை
அணுகி விசாரித்த போது இந்த ஆலயத்தில் அவருக்குத் தெரிந்து
கும்பாபிஷேகம் நடக்கவில்லை என்று கூறியதைக் கேட்டபோது அடைந்த
வேதனைக்கு அளவேயில்லை.

    
இங்குள்ள மூலமூர்த்தியான நடராசப் பெருமானின் மண்டபத்தையாவது
சீர்செய்து காப்பாற்றினாலும் அதுவே பெரும்புண்ணியமாகும். எச்செல்வந்தர்
முன்வருவாரோ? இறையருளே துணை. (இக்கோயில் குருக்கள் கணபதி
அக்ரஹாரத்தில் உள்ளார்.)