பக்கம் எண் :

390 திருமுறைத்தலங்கள்


உற்சவத் திருமேனிகள் உள்ளன. இவைகள் சிற்ப வேலைப்பாடுடையன.
பிராகாரத்தில் துர்க்கை, திருநாவுக்கரசர், சம்பந்தர், விநாயகர், வீரபத்திரர்,
சப்தமாதாக்கள் ஆகிய திருமேனிகள் உள்ளன. கோஷ்ட மூர்த்தங்களாக
விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கை உள்ளனர்.

    கயமுகாசூரனை அழித்த பின்னர் இங்கு வந்து விநாயகர் ஆனந்த
நடனஞ் செய்ததால் இங்குள்ள விநாயகர் “நிருத்த விநாயகர்”
என்றழைக்கப்படுகிறார். மூலவர் - தரிசனம். அரியலூர் சிவன் கோயிலில்
உள்ள சுவாமி, அம்பாள் திருமேனிக்கும் ஆலந்துறையார், அருந்தவநாயகி
என்றே பெயர். நாடொறும் நான்கு கால பூசைகள். 1974ல் கும்பாபிஷேகம்
நடந்துள்ளது. “திருப்பழுவூர்ப்புராணம்” - “யோகவன மான்மியம்” -
தலபுராணம் கபிஸ்தலம் வேலையர் பாடியுள்ளார்.

     பங்குனியில் நடைபெறும் விழாவில் 3ஆம் நாள் சுவாமி மேலப்பழுவூர்
சென்று அங்குள்ள ஜமத்கனி முனிவருக்குக் காட்சி தரும் ஐதீகம்
நடைபெறுகிறது. இக்கோயில் முதலாம் பராந்தகன் காலத்திலேயே கற்றளியாக
எடுக்கப்பட்டதாகும். இத் தலத்துள் உள்ள மற்றொரு சிவாலயம் -
பசுபதீஸ்வரம். பழையபெயர் மறவனீஸ்வரம். இச்சிவாலயம் பமுவேட்டரைய
மன்னன் என்பவன் மகன் ‘கண்டன்’ என்பவன் கட்டியதாகும்.

     “பெரும்பழுவூர் பழுவேட்டரையர்” என்ற தொடர் கல்வெட்டில்
காணப்படுவதிலிருந்து சோழ மன்னர்களுடைய அதிகாரிகளாகிய
பழுவேட்டரையர் என்னும் பட்டம் பெற்ற கூட்டத்தினர் சிலர் அக்காலத்தில்
கோயில் காரியங்களைக் கவனித்து வந்ததாகத் தெரிகிறது என்பர்.
கல்வெட்டில் ‘பிரமதேயமானசிறு பழுவூர், ஆலந்துறை’ என்று தலமும்,
‘ஆலந்துறை மகாதேவர்’ என்று சுவாமியும் குறிக்கப்படுகின்றனர்.
குலோத்துங்கன், ராஜாதிராஜன், ராஜேந்திரசோழன் காலத்திய
கல்வெட்டுக்கள் உள்ளன. இம் மன்னர்கள் இக் கோயிலுக்கு நிலங்களை
விட்டதும் வெள்ளிப் பாத்திரங்களையும் பொன்னாபரணங்களையும்
வழங்கியதுமான செய்திகள் கல்வெட்டுக்களினால் தெரியவருகின்றன.
கோயிலுக்குப் பக்கத்தில் குருக்கள் வீடு உள்ளது.

    “முத்தன மிகு மூவிலை நல்வேலன் விரிநூலன்
     அத்தன் எமை ஆளுடைய அண்ணல் இடமென்பர்
     மைத்தழை பெரும் பொழிலன் வாசம் அதுவீசப்
     பத்தரொடு சித்தர் பயில்கின்ற ஊரே.”        (சம்பந்தர்)