பராந்தக சோழன் நூற்றெட்டு அக்னிஹோத்திரிகளைக் கொண்டு வந்து இத்தலத்தில் குடியேறச் செய்தான். இந்த குடும்பத்தார்கள் ஜைமினி சாமவேதத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுடைய சாமவேதப் பாராயணத்தை முன்னரே கேட்டருளிய விநாயகர், பின்னர் ஞானசம்பந்தர் பாடலையும் கேட்டருளினார். ஆதலின் செவி சாய்த்த விநாயகருக்குச் “சாமகானம் கேட்ட விநாயகர்” என்ற பெயரும் உண்டு. முன்மண்டபத்தில் உள்ள தூணில் பாம்பின் வால் ஒருபுறமும் தலை மறுபுறமுமாக கல்லுள் நுழைந்து வந்திருப்பது போலச் சிற்பமொன்று அழகாக உள்ளது. மற்றொரு தூணில் இருபாம்புகள் ஒன்றோடொன்று பலமுறை பின்னிக் கொண்டிருக்க மத்தியில் சிவலிங்கம் உள்ளதாக ஒரு சிற்பம் உள்ளது. முருகப் பெருமான் சிவலிங்கத்தை வழிபடும் சிற்பமும் உள்ளது. “செடியார் தலையில் பலி கொண்டினி துண்ட படியார் பரமன் பரமேட்டி தன்சீரைக் கடியார் மலரும் புனல்தூவி நின்றேத்தும் அடியார் தொழும் அன்பில் ஆலந்துறையாரே.” (சம்பந்தர்) “பிறவி மாயப் பிணக்கில் அழுந்தினும் உறவெலாஞ் சிந்தித்துன்னி யுகவாதே அறவன் எம்பிரான் அன்பில் ஆலந்துறை மறவாதே தொழுதேத்தி வணங்குமே.” (அப்பர்) -நானூறு கோலந் துறைகொண்ட கோவையருள் கோவைமகிழ் ஆலந்துறையின் அணி முத்தே. (அருட்பா) அஞ்சல் முகவரி :- அ/மி. சத்திய வாகீஸ்வரர் திருக்கோயில் அன்பில் & அஞ்சல் திருச்சி மாவட்டம் - 621 702. |