பக்கம் எண் :

394 திருமுறைத்தலங்கள்


111/57. அன்பிலாலந்துறை
கீழ்அன்பில், அன்பில், அம்பில்.

    சோழநாட்டு (வடகரை)த் தலம்.

    திருச்சிக்குப் பக்கத்தில் உள்ளது. திருச்சியிலிருந்து லால்குடியிலிருந்தும்
பேருந்தில் செல்லலாம். ஊர்ப்பெயர் - அன்பில். கோயிலின் பெயர் -
ஆலந்துறை. வாகீசமுனிவர் பிரமன் ஆகியோர் வழிபட்ட தலம்.

    இறைவன் - சத்திய வாகீஸ்வரர், பிரமபுரீஸ்வரர், ஆலந்துறையார்.

    இறைவி - சௌந்தர நாயகி

    தலமரம் - ஆலமரம்.

    தீர்த்தம் - சந்திர தீர்த்தம். (கோயிலுக்குத் தெற்கில் உள்ள குளம்.
இதில் ஐந்து கிணறுகள் உள்ளன.) இத்தல விநாயகர் ‘செவிசாய்த்த விநாயகர்’
என்றழைக்கப்படுகிறார். கொள்ளிடத் தென் கரையில் நின்று பாடிய
சம்பந்தரின் பாடல்களைச் செவிசாய்த்துக் கேட்டமையின் விநாயகர் இப்பெயர்
பெற்றார்.

    
சம்பந்தர், அப்பர் ஆகியோர் பாடல் பெற்ற தலம்.

    ஐந்து நிலைகளையுடைய ராஜகோபுரம். கிழக்கு நோக்கியது. நேரே
பார்த்தால் மூலவர் சந்நிதி தெரிகின்றது. துவாரபாலகர்களின் பக்கத்தில்,
பிரமன் வழிபடுகின்ற சிற்பம் உள்ளது. இதுபோலவே கருவறையின்
வெளிச்சுவரில் நாற்புறமும் பிரமன், அம்பாள் வழிபடுவது போலவும்
சிற்பங்கள் உள்ளன. பிராகாரமாக வலம் வரும் போது தலவிநாயகராகிய
‘செவிசாய்த்த விநாயகர்’ சந்நிதி உள்ளது.

     அடுத்துச் சப்த கன்னியரும், பிட்சாடனரும், காசிவிசுவநாதர்
விசாலாட்சியும், பைரவரும், வள்ளிதெய்வயானையுடன் சுப்பிரமணியரும்
காட்சி தருகின்றனர்.

    கோஷ்ட மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தியும், இலிங்கோற்பவர்
இடத்தில் மத்தியில் விஷ்ணுவும் இருபுறமும் சூரிய சந்திரர்களும் உள்ளனர்.
பிரம்மா சந்நிதியும் உள்ளது. மூலவர் - சிவலிங்கத் திருமேனி - சுயம்பு ;
சதுரபீட ஆவுடையார். நடராசசபை நேரே வாயில் உள்ளது. அம்பாள்
சந்நிதி கிழக்கு நோக்கியது. நின்ற திருக்கோலம். இக்கோயில் பராந்தக
சோழன் காலத்தில் கட்டப்பட்டது. அதற்கு முன்பு மாடக் கோயிலாக
இருந்ததாம்.