வயல்களும் தென்னந் தோப்பும் சூழ கோயில் சாலையை அடுத்துள்ளது. கிழக்கு நோக்கிய கோபுரம். 1987ல் கும்பாபிஷேகம் செய்விக்கப் பெற்றது. கோபுரத்தின் முன்னால் காவல் தெய்வம் உள்ளது. வாயிலைக் கடந்து உட்புகுந்தால் பிராகாரத்தில் தலமரம், விநாயகர், முருகன், இலக்குமி, நவக்கிரகங்கள், பைரவர் சந்நிதிகள் உள்ளன. கோஷ்ட மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கைத் திருமேனிகள் காட்சி தருகின்றன. நால்வருள், சுந்தரர் கைத்தடியேந்தி நிற்கின்றார். வாயிலைக் கடந்து சென்றால் மிருகண்டு முனிவர் இறைவனை வழிபடும் சித்திரங்களைக் கண்டு மகிழலாம். நுழைவு வாயிலில் மேலே இறைவன் மான்குட்டித் தாயாக வந்த வரலாறு சுதை சிற்பமாகக் காட்சியளிக்கிறது. சுவாமி சந்நிதி கிழக்கு நோக்கியது. அம்பாள் தெற்கு நோக்கிக்காட்சி தருகின்றாள். உற்சவமூர்த்தங்கள் சுவாமி சந்நிதியில் உள்ளன. இத் தலத்தில் இராசராசன் காலத்திய கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன. இவற்றின் மூலம் கோயில் நந்தவனத்தைப் பராமரிக்க நிலம்விட்ட செய்திகளும் ; வரிதரமுடியாமல் வருந்திய மக்கள், நகரை விட்டு வெளியேறுவதை அறிந்த மன்னன், வரியைத் தள்ளுபடி செய்து, குடிமக்கள் வெளியேறுவதைத் தடுத்துக் குடிபுகச் செய்த செய்திகளும் தெரிய வருகின்றன. ஆடிவெள்ளி, நவராத்திரி, அன்னாபிஷேகம், கார்த்திகைச் சோம வாரங்கள், திருவாதிரை, சிவராத்திரி முதலிய விழாக்கள் நடைபெறுகின்றன. பங்குனி மாதத்தில் முதல் 3 நாள்களில் சூரிய ஒளி சுவாமி மீதுபடுகிறது.
செம்பொனார்தரு வேங்கையுஞாழலுஞ் செருந்தி செண்பகமானைக் கொம்புமாரமு மாதவிசுர புனை குருந்தலர் பரந்துந்தி அம்பொனேர்வரு காவிரிவடகரை மாந்துறையுறைகின்ற எம்பிரானிமை யோர்தொழுபைங்கழ லேத்துதல் செய்வோமே (சம்பந்தர்) -“நீலங்கொள் தேத்துறையில் அன்னமகிழ் சேக்கைபல நிலவும் மாந்துறை வாழ் மாணிக்கமலையே.” (அருட்பா) அஞ்சல் முகவரி :- அ/மி. ஆம்ரவனேஸ்வரர் திருக்கோயில் மாந்துறை & அஞ்சல் - லால்குடி. S.O. (வழி) ஆங்கரை. லால்குடி வட்டம் - திருச்சி மாவட்டம். 621 703. |