113/59. திருப்பாற்றுறை திருப்பாலத்துறை | சோழநாட்டு (வடகரை)த் தலம். மக்கள் வழக்கில் திருப்பாலத்துறை என்று வழங்குகிறது. திருவானைக்காவிலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது. திருவானைக்கா- கல்லணை சாலையில் வந்து பனையபுரம் கிராமத்திற்குள் திரும்பிச் செல்ல வேண்டும். ‘திருச்சி மெயின்கார்டு கேட்’டிலிருந்து திருவானைக்கா வழியாகக் கல்லணை செல்லும் நகரப் பேருந்தில் சென்று பனையபுரம் என்ற இடத்தில் இறங்கி, கொள்ளிடம் நோக்கி வரவேண்டும். மார்க்கண்டேயர், சூரியன் வழிபட்ட தலம். இறைவன் - ஆதிமூலேசுவரர், ஆதிமூலநாதர். இறைவி - மேகலாம்பிகை, மோகநாயகி, நித்யகல்யாணி. தலமரம் - வில்வம். தீர்த்தம் - கொள்ளிடம். சம்பந்தர் பாடல் பெற்றது. பிரதான கோபுரம் மூன்று நிலைகளையுடையது. விநாயகர், முருகர், மகாலட்சுமி, துர்க்கை சந்நிதிகள் உள்ளன. பைரவர், நவக்கிரகமும் உள்ளன. அம்பாள் தெற்கு நோக்கிய சந்நிதியில் நான்கு திருக்கரங்களுடன் (அபய, வரதம், நீலோற்பலமும் தாமரையும் ஏந்தி) காட்சியளிக்கின்றாள். மூலவர் சுயம்புத் திருமேனி. சிறிய மூர்த்தி. அர்த்த மண்டபத்தில் சிற்ப வேலைப்பாடுடன் நான்கு தூண்கள் விளங்கி, “தேவசபை” என்றழைக்கப் படுகின்றது. இங்குள்ள அம்பாளை நெஞ்சுருகி வழிபட்டால் மகப்பேறு கிட்டும், பிணிதீரும் என்று நம்புகின்றனர் மக்கள். பள்ளத்தூரைச் சேர்ந்த நகரத்தாரின் தனி நிர்வாகத்தில் கோயில் உள்ளது. 11-7-1956ல் கும்பாபிஷேகம் நடந்துள்ளது. நாடொறும் நான்கு கால வழிபாடுகள். அண்மையில் உள்ள தலங்கள் (1) திருமாந்துறை (2) திருவானைக்கா (3) திருவெறும்பியூர் (4) திருத்தவத்துறை (லால்குடி) முதலியன. தலபுராணம் உள்ளதாகத் தெரியவில்லை. கல்வெட்டில் இத்தலம் கொள்ளிடத் தென்கரை நாட்டுப் பிரமதேயமான உத்தமசீவி சதுர்வேதி மங்கலத் திருப்பாற்றுறை” என்றும் இறைவன் |