பக்கம் எண் :

434 திருமுறைத்தலங்கள்


மனைவி தான் சூடி மகிழ்ந்தாள். இதனால் இளையவள் இருந்த உறையூர்
மண் மாரியால் அழிந்தது. மூத்தவள் இருந்த திருக்காட்டுப்பள்ளி மட்டும்
அழியாமல் பிழைத்தது என்று சொல்லப்படுகின்றது.

    ஐந்து நிலைகளுடன் கூடிப் பொலிவுடன் ராஜகோபுரம் உள்ளது. செப்புக்
கவசமிட்ட கொடிமரம் உள்ளது. வலமாகச் சென்றால் விநாயகர் சந்நிதி
உள்ளது. உட்சென்றதும் வலப்பால் அம்பாள் சந்நிதி உள்ளது - தெற்கு
நோக்கியது - நின்ற திருக்கோலம். சந்நிதி வாயிலில் சுதையாலான
துவாரபாலகிகள் உளர்.

    உள்கோபுரம் மூன்று நிலைகளுடன் உள்ளது. உட்சென்றால் வலப்பால்
நடராச சபை உள்ளது. உற்சவத் திருமேனிகள் பாதுகாத்து வைக்கப்
பட்டுள்ளன. நவக்கிரக சந்நிதியில், எல்லாக் கிரகங்களும் சூரியனைப்
பார்த்தவாறே அமைந்துள்ளன.

    மூலவர் - சிவலிங்கத் திருமேனி. நான்கு படிகள் பூமியில் தாழ உள்ளார்.
வெள்ளிக் கவச அலங்காரம், உள்ளத்திற்கு ஓர் அலாதியான மனநிறைவு.
படிகள் இறங்கிச் சுற்றி வலம் வரலாம். சோழ மன்னன் பிரதிஷ்டை,
மூலவரைச் சுற்றி வரும் பிராகாரத்தில் கோஷ்ட மூர்த்தமாக யோக
தட்சிணாமூர்த்தி விளங்குகின்றார்.

    உள் பிராகாரத்தில் விநாயகர் உள்ளார். இலிங்கோற்பவர், கோஷ்ட
மூர்த்தமாக இருக்காமல், விநாயகருக்குப் பக்கத்தில் சந்நிதியாகவுள்ளது.
இலிங்கோற்பவரிடத்தில் அர்த்த நாரீஸ்வரர் உள்ளார். அடுத்து வள்ளி
தெய்வயானை சமேத ஆறுமுகப் பெருமானுள்ளார். பக்கத்தில் காசி
விசுவநாதர் விசாலாட்சி, கஜலட்சுமி, துர்க்கை சந்நிதிகள் உள.

    முன் மண்டபத்தில் வலப்பால் பைரவர், நால்வர் திருமேனிகள்
உள்ளன. நித்திய வழிபாடுகள் முறையாக நடைபெறுகின்றன. மாசிமகமும்
பங்குனிப் பெருவிழாவும் இங்குச் சிறப்புடையன.

    முதல் ஆதித்திய சோழனின் காலத் திருப்பணியைப் பெற்ற கோயில்.
‘பள்ளி’ என்ற சொல்லைக் கொண்டு இவ்வூரில் ஒரு காலத்தில் சமணர்கள்
வாழ்ந்திருக்கலாம் என்று கருதுகின்றனர். அதற்கேற்ப 24-வது தீர்த்தங்கரரின்
சிலை இத்தலத்தில் கிடைத்துள்ளதாம்.

     “வேதனார் வெண்மழு ஏந்தினார் அங்கமுன்
      ஓதினார் உமையொரு கூறனார் ஒண்குழைக்
      காதினார் கடிபொழில் சூழ்ந்த காட்டுப் பள்ளி
      நாதனார் திருவடி நாளும் நின்றேத்துமே.”      (சம்பந்தர்)