பக்கம் எண் :

436 திருமுறைத்தலங்கள்


     மேற்கு நோக்கிய சந்நிதி. சிறிய ராஜகோபுரம். வாயில் துவார பாலகர்
தரிசனம். உட்புகுந்தால் இடப்பால் சுப்பிரமணியர் சந்நிதி. அம்பாள்
சந்நிதியை வலமாகச் சுற்றியவாறே வரும்போது பிராகாரத்தில் விநாயகர், விசுவநாதர், விசாலாட்சி சந்நிதிகள் உள்ளன. அடுத்த மண்டபத்தில் வலப்பால்
நவக்கிரக சந்நிதி. இடப்பால் அம்பாள் சந்நிதி நின்றகோலம். நேரே மூலவர்
தரிசனம்.

      உள் மண்டபத்தில் வலப்பால் நால்வர் காட்சி. அணுக்க வாயிலில்
பழைமையான அப்பர் திருமேனி தனியே உள்ளது. மூலவர் அழகான மூர்த்தி.
நாடொறும் இரு பூஜைகள். இத்தலக் கல்வெட்டு இறைவனை “தென்
பரம்பைக்குடி திருவாலம் பொழில் உடைய நாதர்” என்று குறிக்கிறது.
அப்பரும் தம் திருத்தாண்டகத்தில் “தென் பரம்பைக் குடியின்மேய
திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே” என்று பாடியுள்ளார். இதிலிருந்து
ஊர் - பரம்பைக்குடி என்றும் ; கோயில் - திருவாலம் பொழில் என்றும்
வழங்கப்பட்டதாகத் தெரிகின்றது. ஆவணி மூலவிழா, சஷ்டி, நவராத்திரி,
கார்த்திகைச் சோமவாரங்கள், சிவராத்திரி முதலிய விழாக்கள்
நடைபெறுகின்றன.

    
“கருவாகிக் கண்ணுதலாய் நின்றான் தன்னைக்
          கமலத்தோன் தலையரிந்த காபாலிய்யை
     உருவார்ந்த மலைமகளோர் பாகத்தானை
          உணர்வெலா மானானை ஓசையாகி
     வருவானை வலஞ்சுழியெம் பெருமான் றன்னை
          மறைக்காடும் ஆவடு தண்துறையுமேய
     திருவானைத் தென் பரம்பைக் குடியின்மேய
          திருவாலம் பொழிலானைச் சிந்திநெஞ்சே.”     (அப்பர்)

                                       - மருக்காட்டு
     நீலம் பொழிற்குள் நிறைதடங் கட்கேர் காட்டும்
     ஆலம் பொழிற்சிவயோகப் பயனே.              (அருட்பா)

அஞ்சல் முகவரி :-

    
அ/மி. ஆத்மநாதேசுவரர் திருக்கோயில்
     திருவாலம் பொழில் - அஞ்சல்
     திருப்பந்துருத்தி - S.O. 613 103.
     (வழி) திருக்கண்டியூர் - திருவையாறு வட்டம்
     தஞ்சை மாவட்டம்.