பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 445


     கிழக்கு நோக்கிய கோயில். சிறிய ராஜகோபுரம் மூன்று நிலைகளுடன்
கிழக்கு நோக்கிக் காட்சி தருகிறது. அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியுள்ளது.
மகாமண்டபத்தில் வேதவிநாயகர் (தலவிநாயகர்) இறைவன் நான்கு
முகங்களாலும் அருளிச்செய்யும் நான்கு வேதங்களையும் செவிசாய்த்துக்
கேட்கும் நிலையில்; இடக்காலை உயர வைத்து அற்புதமாகக்
காட்சியளிக்கிறார். உற்சவ மூர்த்தங்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.

     மூலவர் - சிவலிங்கத் திருமேனி. சுவாமி வாழைமடுவில் உற்பத்தி
யானதால் ‘வாழைமடு நாதர்’ என்றும் அழைக்கப்படுகின்றார்.

     அண்மையில் உள்ள தலங்கள் திருக்கண்டியூர், திருச்சோற்றுத்துறை
முதலியன. முதலாம் ஆதித்த சோழன் காலக்கோவிலான இக்கோயிலின்
சுவாமியைக் கல்வெட்டு “வேதிகுடி மகாதேவர்”, “பரகேசரி சதுர்வேதி
மங்கலத்து மகாதேவர்” எனக் குறிப்பிடுகின்றது.

 
“உன்னி இருபோதும் அடிபேணும் அடியார்தம் இடர் ஒல்க அருளித்
  துன்னியொரு நால்வருடன் ஆல் நிழலிருந்த துணைவன்தன் இடமாம்
  கன்னியரொடு ஆடவர்கள் மாமணம் விரும்பி அருமங்கலம் மிக
  மின்னியலும் நுண்ணிடை நன்மங்கையர் இயற்றுபதி வேதிகுடியே.”
                                               (சம்பந்தர்)

      “மையணிகண்டன் மறைவிரி நாவல் மதித்துகந்த
      மெய்யணி நீற்றன் விழுமிய வெண் மழுவாட்படையான்
      செய்ய கமலம் மணங்கமழும் திருவேதிகுடி
      ஐயனை ஆராவமுதினை நாமடைந்து ஆடுதுமே."     (அப்பர்)

                                         “-ஆற்றலிலாத்
    தீதிக்குடியென்று செப்பப்படார் மருவும்
    வேதிக்குடியின்ப வெள்ளமே.”           (அருட்பா)

அஞ்சல் முகவரி:-

    அ/மி. வேதபுரீசுவரர் திருக்கோயில்
    திருவேதிகுடி - கண்டியூர் அஞ்சல் - 613 202
    திருவையாறு வட்டம் - தஞ்சை மாவட்டம்.