பக்கம் எண் :

452 திருமுறைத்தலங்கள்


ஐயம்பேட்டை புகைவண்டி நிலையம் உள்ளது. இக்கோயில் சுவாமி மலை
தேவஸ்தானத்தோடு இணைந்ததாகும். திருமால் வழிபட்டுச் சக்கராயுதம்
பெற்ற தலம். சக்கரவாளப் பறவை வழிபட்ட தலம் என்பாருமளர்.
“வண்சக்கிரம் மால் உறைப்பால் அடிபோற்றக் கொடுத்த பள்ளி” என்பது
இத் தலபுராண வரலாற்றை உறுதிப்படுத்தும்.

    இறைவன் - சக்கரவாகேஸ்வரர்

    இறைவி - தேவநாயகி.

    சயந்தனும் தேவர்களும் வழிபட்ட தலம்.

    சம்பந்தர் பாடல் பெற்றது. இன்று கோயிலைச் சுற்றி இஸ்லாமியர்களின்
குடியிருப்புகள் மிகுதியாகவுள்ளன. திருக்குளத்தை அடுத்து கோயில் கிழக்கு
நோக்கியுள்ளது. கொடி மரமில்லை. உள்ளே நுழைந்ததும் முதலில் வலப்பால்
அம்பாள் சந்நிதி உள்ளது. தெற்கு நோக்கியது. நின்றநிலை. அதைத் தாண்டி
உள்ளே சென்றால் மூலவர் வாயில் மண்டபத்தில் முகப்பில் மேலே
ரிஷபாரூடர். விநாயகர், வேலவர் உருவங்கள் சுதையால்
அமைக்கப்பட்டுள்ளன. கருவறை கீழ்ப்புறம் கருங்கல்லாலும் மேற்புறம்,
விமானம் சுதையாலும் ஆக்கப்பட்டவை. விமானத்தில் அதிக சிற்பங்களில்லை.

    கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, இலிங்கோற்பவர்,
பிரம்மா, துர்க்கை ஆகியோர் உளர். பிராகார வலம் வரும்போது விநாயகர்,
சுப்பிரமணியர் சந்நிதிகள் உள்ளன. மகாமண்டபத்தில் சூரியன், சந்திரன்,
அழகான பைரவர், நால்வர் ஆகியோர் காட்சி தருகின்றனர். அர்த்த
மண்டபத்தூண்கள் அழகு உடையவை. மூலவர் - சிவலிங்கத் திருமேனி.
கிழக்கு நோக்கிய சந்நிதி. உயர்ந்த தோற்றம்.

    
கல்வெட்டுக்களில், இவ்வூர், “குலோத்துங்க சோழவள நாட்டு, விளநாட்டு,
இராசேந்திர சோழ சதுர்வேதிமங்கலம்” என்று குறிக்கப்பட்டுள்ளது. மூன்றாம்
குலோத்துங்க சோழனின் 12ஆவது ஆண்டுக் கல்வெட்டு, இவ்வூர்ச்சபைக்குரிய
சில விதிகளைக் கூறுகின்றது. நாற்பது வயதுக்கும் மேற்பட்டவரே ஊர்ச்சபை
உறுப்பினராகலாம் என்றும், அவர்களும் பத்து ஆண்டுகளுக்குள்
உறுப்பினர்க்கு நிற்காதவராக இருக்க வேண்டுமென்றும் ஊர்ச்சபை விதிகள்
கூறப்பட்டுள்ளன.
 
    “படையினார் வெண்மழுப்பாய் புலித்தோல் அரை
     உடையினார் உமையொரு கூறனார் ஊர்வதோர்
     விடையினார் வெண்பொடிப் பூசியார் விரிபுனல்
     சடையினார் உறைவிடம் சக்கரப் பள்ளியே.”     (சம்பந்தர்)