அதுகேட்ட மன்னன், கொட்டையூரில் ஏரண்டம் என்னும் கொட்டைச் செடியில் அருகில் தவம் செய்த ஏரண்ட முனிவரையடைந்து, செய்தியைச் சொல்ல, அவர் அவ்வாறே இறங்க, அப்பிலம் மூடப்பட்டு காவிரி வெளிப்பட்டது என்பது தலவரலாறு. இம்முனிவர் உருவம் கோயிலுள் உள்ளது. ஏரண்ட முனிவர், ஆதிசேஷன், உமையம்மை, இந்திரன், திருமால், பிரமன் ஆகியோர் வழிபட்ட தலம். இன்றும் மஹாசிவராத்திரி நாளில் நான்கு யாமங்களிலும் ஆதிசேஷன் வெளிப்பட்டு வலஞ்சுழி, நாகேச்சுரம், பாம்புரம், நாகைக்காரோணம் என்னும் நான்கு தலங்களிலும் வந்து வழிபடுவதாகச் செவிவழிச் செய்தி சொல்லப்படுகிறது. இறைவன் - கபர்த்தீசுவரர், செஞ்சடைநாதர், கற்பகநாதேஸ்வரர், வலஞ்சுழிநாதர். இறைவி - பிருகந்நாயகி, பெரியநாயகி தலமரம் - வில்வம் தீர்த்தம் - காவிரி, அரசலாறு, ஜடாதீர்த்தம் தலவிநாயகர் - வெள்ளைவாரணப் பிள்ளையார், சுவேதவிநாயகர். சம்பந்தர், அப்பர் பாடல் பெற்றது. வெள்ளைப் பிள்ளையாரே இத்தலத்தின் சிறப்பு மூர்த்தியாவார். இப்பிள்ளையார் உள்ள மண்டபம் இந்திரனால் அமைக்கப்பட்ட அழகான மண்டபம். சித்திரத் தூண்களும், கல்குத்துவிளக்கும் மிக்க அழகுடையவை. கடல் நுரையால் செய்யப்பட்டு இந்திரனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட மூர்த்தியே வெள்ளைப் பிள்ளையார் ஆவார். இப்பெருமானுக்குப் பச்சைக்கற்பூரம் மட்டும் சார்த்தி அபிஷேகம் செய்யப்படுகிறது. அழகான கோபுரம் கிழக்கு நோக்கியுள்ளது. அம்பாள் வலப்பக்கம் திருமணக் கோலக் காட்சி தருகிறார். இங்குள்ள அஷ்டபுஜகாளி சிறப்பு வாய்ந்த மூர்த்தம். இங்குள்ள பைரவமூர்த்தி மிகவும் உக்கிரமம் வாய்ந்தவராக விளங்கியமையால் அதைத் தணிப்பதற்காகச் சிறிது பின்னப்படுத்தப் பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. சனீஸ்வரர் சந்நிதி உள்ளது. மூலவர் அழகான மூர்த்தி. வாணி, கமலாம்பாள் சமேத விநாயகர் உற்சவ மூர்த்தி உள்ளது. ஆவணி சதுர்த்தி விழா இங்கு விசேஷம். இத்தலம் திருமுறைத் தலம் என்பதைவிட வெள்ளை விநாயகர் தலம் என்ற பெயரிலேயே மிகுதியும் பிரசித்தியாகத் திகழ்கின்றது. |