பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 581


     மேற்கு நோக்கிய பெரிய கோயில். சோழர்காலத் திருப்பணியைப் பெற்ற
இக்கோயிலின் ராஜகோபுரம் ஐந்து நிலைகளையுடையது - ஏராளமான
சிற்பங்கள். உள்ள கவசமிட்ட கொடிமரம். கொடிமரத்து விநாயகர். பலிபீடம்,
நந்தி உள்ளன. பிராகாரத்தில் சந்நிதிகளில்லை. முன்மண்டபத் (வௌவால்
நெத்தி)தில் இடப்பால் அம்பாள் சந்நிதி. நேரே மூலவர் தரிசனம்.
உள்வலத்தில் நவக்கிரகங்கள், நடராசசபை, பைரவர், வீரபைரவர் சந்நிதிகள்.

     மூலவர் மிக்க அழகானமூர்த்தி - கருவறையின் பின்புறத்தில்
லிங்கோற்பவருக்குப் பக்கத்தில் நரன் (மனிதன்) வழிபடும் சிற்பம் உள்ளது.
கோஷ்டமூர்த்தங்களாக நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோற்பவர்,
பிரம்மா, பிட்சாடனர், அர்த்த நாரீஸ்வரர், துர்க்கை மூர்த்தங்கள் உள்ளன.
நாடொறும் நான்கு கால வழிபாடுகள். பிற விழாக்கள் ஏதுமில்லை.

     முதலாம் இராசராசன் முதல் மூன்றாம் குலோத்துங்கன் வரையிலான
மன்னர்களின் காலத்திய கல்வெட்டுகள் உள்ளன. இக் கல்வெட்டுக்களில்
இத்தலம் ‘க்ஷத்திரிய சிகாமணி வளநாட்டு, திருநறையூர் நாட்டுத் திருநறையூர்’
என்றும் ; இறைவன் பெயர் ‘சித்தீச்சரமுடையார்’, ‘கங்காள தேவர்’ என்றும்
குறிக்கப்பட்டுள்ளது. மற்றொரு கல்வெட்டில் இவ்வூர் “குலோத்துங்க சோழ
வளநாட்டுத் திருநறையூர்” என்றும், “பஞ்சவன் மாதேவியான சதுர்வேதி
மங்கலத்துத் திருநறையூர்” என்றும் குறிக்கப்பட்டுள்ளது.

     இக்கல்வெட்டுக்களிலிருந்து (1) பிட்சாடனருக்கு நிவேதனம் செய்யப்
பொன் தந்தது (2) நாளொன்றுக்குச் சிவயோகியார் ஒருவருக்கு உணவு
படைக்க, மண்ணி நாட்டுக் கருப்பூர் உடையான் என்பவர் நிலம் விட்டது
(3) கோயிலில் விளக்கெரிக்க நிலங்கள் வழங்கியது போன்ற செய்திகள்
தெரியவருகின்றன. பக்கத்தில் வைணவத் தலமான நாச்சியார் கோயில்
உள்ளது.

    
 “நீடவல்ல நிமிர் புன்சடை தாழ
     ஆடவல்ல அடிகள் இடமாகும்
     பாடல் வண்டு பயிலு நறையூரில்
     சேடர் சித்தீச்சரமே தெளிநெஞ்சே.”      (சம்பந்தர்)

     “நீரும் மலரு(ம்) நிலவுஞ் சடைமேல்
     ஊரும் அரவமும் உடையானிடமாம்
     வாரும் மருவி மணி பொன் கொழித்துச்
     சேருந் நறையூர்ச் சித்தீச்சுரமே.”         (சுந்தரர்)