பக்கம் எண் :

580 திருமுறைத்தலங்கள்


182/65. திருநறையூர்ச்சித்தீச்சரம்

திருநறையூர்

     சோழநாட்டு (தென்கரை)த் தலம்.

     ஊர்ப் பெயர் - திருநறையூர் - கோயில் சித்தீச்சரம்.

     கும்பகோணம் - நாச்சியார் கோயில் சாலையில் வந்து நாச்சியார்
கோயிலின் முற்பகுதியாகிய திருநறையூரில் இறங்கிக் கோயிலையடையலாம்.
சாலையோரத்தில் இறங்கினால் வீதியின் கோடியிலுள்ள கோயிலைக்
காணலாம். (நாச்சியார் கோயில், திருநறையூர் இரண்டும் ஒன்றோடொன்று
இணைந்ததாகும். முற்பகுதி திருநறையூர். பிற்பகுதி நாச்சியார் கோயில்.)
கோயில் வரை பேருந்து செல்லும்.

     பிரமன், சித்தர்கள், குபேரன், மார்க்கண்டேயன் ஆகியோர் வழிபட்டது.
துர்வாசமுனிவரால் பறவை உருவச்சாபம் பெற்ற மனிதன் (நரன்)
வழிபட்டதால் இத்தலத்திற்கு ‘நரபுரம்’ என்றும் பெயர். பிரமன் வழிபட்டதால்
பிரமபுரம் எனவும் சொல்லப்படுகிறது. சுகந்தவனம் என்பது வேறொரு பேர்.

     இறைவன் - சித்தநாதேஸ்வரர், வேதேஸ்வரர், நரேஸ்வரர், சித்தநாதர்.      இறைவி - சௌந்தரநாயகி, அழகம்மை
     தலமரம் - பவளமல்லிகை
     தீர்த்தம் - சூலதீர்த்தம் (கோயிலின் வடபால் உள்ளது)

     சம்பந்தர், சுந்தரர் பாடல் பெற்றது.