பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 579


     பிரமன், உமாதேவி, முருகன் ஆகியோர் வழிபட்ட சிறப்புடையது.
கிழக்கு நோக்கிய சிறிய ராஜகோபுரம், கொடிமரம் நந்தி பலிபீடம் உள்ளன.
பிராகாரத்தில் விநாயகர், நால்வர், சோழ மன்னன் மனைவி ஆகியோர் உளர்.
உள்சுற்றில் விநாயகர், முருகன், கஜலட்சுமி, நவக்கிரக சந்நிதிகள். சுவாமி
சந்நிதியில் பழைமையான முருகப் பெருமான் உருவமுள்ளது.

     சின்முத்திரையுடன் தியான நிலையிலுள்ள தண்டபாணி அருமையான
திருமேனி. அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியது. கோஷ்டங்களில் நர்த்தன
விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கை உள்ளனர்.
தலமரம் வன்னி. மிகப் பழைமையானது. மங்கள தீர்த்தக் கரையில் இரட்டை
விநாயகர் சந்நிதி உள்ளது. இக் கோயிலில் உள்ள பிக்ஷாடனர் மிகச்
சிறப்பான மூர்த்தியாவார். இவருக்குச் சித்திரை பரணியில் அமுதுபடையல்
நடைபெறுகிறது.

     செங்கற்கோயிலாக இருந்த இக்கோயில் கரிகாற்சோழன் காலத்தில்
கற்கோயிலாயிற்று என்றொரு கல்வெட்டு தெரிவிக்கின்றது. மற்றும் சுவாமி
புறப்பாட்டிற்கு ஒரு மாது நிலமளித்த நிவந்தமும் கல்வெட்டால் தெரிகின்றது.
கல்வெட்டில் சுவாமி “பேணு பெருந்துறை மகாதேவர்” என்றும் அம்பிகை
“மலையரசியம்மை” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

    
 “பைம்மா நாகம் பன்மலர் கொன்றை
          பன்னிவெண் கொம்பென்று பூண்டு
     செம்மாந்தையம் பெய்கென்று சொல்லிச்
          செய் தொழில் பேணியோர் செல்வர்
     அம்மானோக்கிய அந்தளிர் மேனி
          அரிவையோர் பாகமமர்ந்த
     பெம்மானல்கிய தொல் புகழாளர்
          பேணு பெருந்துறையாரே.”     (சம்பந்தர்)

                                     - “மந்தணத்தைக்
     காணு மருந்துறையிக் காமர் தலம் என்றெவரும்
     பேணு பெருந்துறையிற் பெம்மானே.”           (அருட்பா)

அஞ்சல் முகவரி :-

     அ/மி. சிவானந்தேஸ்வரர் திருக்கோயில்
     திருப்பந்துறை - நாச்சியார் கோயில் அஞ்சல்
     கும்பகோணம் வட்டம் - தஞ்சை மாவட்டம் 612 602.