பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 585


     திருமால் வெள்ளைப் பன்றி வடிவத்திலிருந்து பூசித்த தலம். குபேரன்
இராவணன் பட்டினத்தார் அருணகிரிநாதர் ஆகியோர் வழிபட்ட தலம்.

     இவ்வூரிலுள்ள பட்டினத்து விநாயகர் கோயிலில் பட்டினத்தார் சிலை
அமர்ந்த நிலையில் உள்ளது. பட்டினத்தாரின் தமக்கை இவ்வூரில் வாழ்ந்தார்.

     ‘குபேரபுரம்’, ‘பூகயிலாயம்’, ‘சண்பகாரண்யம்’ என்பன தலத்தின் வேறு
பெயர்கள். இவ்வூரில் பூமிக்கடியில் ஓர் அடிக்கு ஒரு சிவலிங்கம் இருப்பதாக
ஐதீகம். இதனால்தான் ஞானசம்பந்தர் முதலியோர் இத்தலத்தில் நடக்காமல்,
அங்கப்பிரதட்சணம் செய்து சுவாமியை தரிசித்துப் பின்பு ஊர் எல்லைக்கு
அப்பால் தள்ளி நின்று பெருமானைப் பாடியதாக வரலாறு. அவ்வாறு பாடிய
இடம் இன்று ‘சுவாமிகள் துறை’ என்றழைக்கப்படுகிறது. (அரிசொல்ஆறு)
அரிசிலாறு பக்கத்தில் ஓடுகின்றது. பழைமையான கோயில்.

     இறைவன் - சிவகுருநாதசுவாமி, சிவபுரீஸ்வரர், பிரமபுரீஸ்வரர்,
சிவபுரநாதர்

     இறைவி - ஆர்யாம்பாள், சிங்காரவல்லி, பெரியநாயகி.
     தலமரம் - சண்பகம் (இப்போதில்லை)
     தீர்த்தம் - சந்தர தீர்த்தம் - எதிரில் உள்ளது.
     சம்பந்தர், அப்பர் ஆகியோர் பாடல் பெற்ற பதி.

     ஐந்து நிலைகளையுடைய பழைமையான ராஜகோபுரம் கிழக்கு
நோக்கியுள்ளது. கொடிமரம் இல்லை. பலிபீடம் மட்டுமே உள்ளது. உள்
கோபுரம் மூன்று நிலைகளுடன் காட்சி தருகின்றது. உள்ளே நுழைந்தால்
நேரே மூலவர் சந்நிதி - கிழக்கு நோக்கியது. முன்னால் விசாலமான
கல்மண்டபம் உள்ளது. உள்கோபுரத்தில் உட்சுவரில் சந்நிதியைப் பார்த்தவாறு
சூரிய சந்திரரின் உருவங்கள் உள்ளன. விசாலமான பிராகாரம்.

     கோஷ்ட மூர்த்தமாக நடன விநாயகரும், பக்கத்தில் தட்சிணா
மூர்த்தியும் அடுத்து இலிங்கோற்பவரும், பிரமனும், துர்க்கையும் உள்ளனர்.
தட்சிணாமூர்த்திக்குப் பக்கத்தில் சுவரில் இத்தல வரலாறாகிய திருமால்
வெண் பன்றியாக இருந்து வழிபட்ட சிற்பம் (சிவ லிங்கம், வெண்பன்றி
வாயில் மலருடன், திருமால்) உள்ளது. இந்நிகழ்ச்சியை அப்பர் பெருமான்
இத்தலத்துத் திருத்தாண்டகத்தில் “பாரவன்காண்” என்று தொடங்கும்
பாடலில் “பிறை எயிற்று வெள்ளைப் பன்றி பிரியாது பலநாளும்
வழிபட்டேத்தும் சீரவன்காண்” என்று பாடியுள்ளார்.