இறைவன் - பசுபதீஸ்வரர் இறைவி - சாந்தநாயகி தலமரம் - வில்வம் தீர்த்தம் - க்ஷீரபுஷ்கரணி (நல்லநிலையில் இல்லை) அப்பர் பாடல் பெற்றது. கோயில் மிகமிகப் பழைமையாகவுள்ளது - பொலிவு குறைந்துள்ளது. ராஜகோபுரமில்லை. வாயில் கடந்து உள்ளே சென்றால் பிராகாரத்தில் விநாயகர், சுப்பிரமணியர், கஜலட்சமி சந்நிதிகள் கிலமாகவுள்ளன. நவக்கிரகங்கள், சூரியன் மூர்த்தங்கள் உள. வௌவால் நெத்தி மண்டபத்தில் வலப்பால் அம்பாள் சந்நிதி. இம் மண்டபத்தில் ஆபத் சகாய மகரிஷி உருவமுள்ளது. ஒருபால் மூன்று திருவடிகளுடன் கூடிய ஜ்வரஹரேசர் உருவமுள்ளது. சுரநோயால் வாடுபவர்கள் இம்மூர்த்திக்கு வெந்நீரால் அபிஷேகம் செய்து, புழுங்கலரிசி நிவேதனம் செய்தால் சுரம் நீங்குவது இன்றும் கண்கண்ட பிரார்த்தனையாக உள்ளது. மற்றொரு தூணில் காமதேனு, அம்பாள் வடிவம் போன்ற சிற்பங்கள் உள்ளன. மூலவர் சந்நிதி. சிறிய பாணம். சிவலிங்கத் திருமேனி ஆழமான வடுப்பட்டு இரண்டாகப் பிளந்திருப்பது போலக் காட்சியளிக்கிறது. இக்கோயில் உற்சவமூர்த்தங்கள் திருப்புகலூர்க் கோயிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. “பாலனாய்க் கழிந்த நாளும் பனிமலர்க் கோதைமார்தம் மேலனாய்க் கழிந்த நாளும் மெலிவொடு மூப்பு வந்து கோலனாய்க் கழிந்த நாளும் குறிக்கோளிலாது கெட்டேன் சேலுலாம் பழனவேலித் திருக்கொண்டீச்சரத்துளானே.” (அப்பர்) - “மன்னுமலர் வண்டீச்சுரம்பாடி வார்மதுவுண்டுள் களிக்கும் கொண்டீச்சுரத்தமர்ந்த கோமானே.” (அருட்பா) அஞ்சல் முகவரி :- அ/மி. பசுபதீஸ்வரர் திருக்கோயில் திருக்கண்டீஸ்வரம் - தூத்துகுடி அஞ்சல் (வழி) சன்னாநல்லூர் - நன்னிலம் R.M.S. திருவாரூர் மாவட்டம் 609 504. |