பக்கம் எண் :

600 திருமுறைத்தலங்கள்


     தொழுது, வீழ்ந்து வணங்கி, ‘அரங்காடவல்லார் அழகியர்’ என்று
பதிகம் பாடி, அருள் பெற்றார். இந்நிகழ்ச்சியின் நினைவாக இன்றும், ஊர்க்கு
வடகிழக்கில் உள்ள மாணிக்க நாச்சியார் திட்டிற்கு அருகே உள்ள குளம்
‘சந்தித்த தீர்த்தம்’ என்னும் பெயருடன் திகழ்கின்றது. சம்பந்தர், சுந்தரர்
பாடிய பதி.

     கோயில் வாயில் முகப்பு கிழக்கு நோக்கியுள்ளது. ராஜகோபுரமில்லை.
வாயில்மேல் ரிஷபாரூடர் சிற்பம் சுதையால் ஆக்கப்பட்டுள்ளது.
உள்நுழைந்ததும் வலப்பால் பெரியநாயகி அம்பாள் சந்நிதி உள்ளது - நின்ற
திருக்கோலம் - தெற்கு நோக்கியது. தலப்பதிகம் கல்லில் பொறிக்கப்
பட்டுள்ளது. முன்னால் துணை இருந்த விநாயகர் சந்நிதி உள்ளது.
இப்பெயர்க்குச் சொல்லப்படும் காரணம் வருமாறு :-

     தந்தையை இழந்து, பிறந்த கரிகாலனை, கொன்று அரசைக் கைப்பற்ற
நினைத்த தாயத்தார்களிடமிருந்து காப்பாற்ற முயன்ற தாய்மாமனாகிய
‘இரும்பிடர்த்தலையார்’ என்னும் சங்கப் புலவர், பிறர் அறியாமல்,
குழந்தையையும் தாயையும் பனையூர்க்கு அனுப்பி வைத்தார். அரசி, தன்
மகனுடன் இவ்வூர்க்கு வந்து, இக்கோயிலில் அடைக்கலம் புகுந்து,
இவ்விநாயகரிடம் முறையிட்டு, அவர் துணையால் எட்டு ஆண்டுகள்
பாதுகாப்பாக இருந்தாள். ஆகவே கரிகாற்சோழனுக்குத் துணையிருந்ததனால்
இவ்விநாயகர் ‘துணையிருந்த விநாயகர்’ என்னும் பெயர் பெற்றார்.

     அடுத்துத் தலமரங்களாகிய இரு பனைமரங்கள் உள்ளன. இம்மரங்கள்
நெடுங்காலமாக இருந்து வருகின்றன. வளர்ந்துள்ளவை முதிர்ச்சியுறுங்
காலத்தில், வித்திட்டு முளைக்காததாக, இரண்டின் அடியிலும் முறையே
பனங்கன்றுகள் தாமாகவே தோன்றி வளர்ந்து வருகின்றன.

     பிராகாரத்தில் முதலில் பராசர முனிவர் உருவம் உள்ளது. அடுத்து
விநாயகர் சந்நிதி உள்ளது. சுந்தரர் வரலாற்றுத் தொடர்புடைய திருவாரூரில்
உள்ள மாற்றுரைத்த பிள்ளையார் நினைவாக இவ்விநாயகரும் ‘மாற்றுரைத்த
விநாயகர்’ என்றழைக்கப்படுகின்றார். அடுத்து சுப்பிரமணியர் சந்நிதி.

     கோஷ்ட மூர்த்தமாக, தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரமன், துர்க்கை
ஆகியோர் காட்சி தருகின்றனர். சண்டேசுவரர் சந்நிதி உள்ளது. சப்தரிஷிகள்
வழிபட்ட ஏழு சிவலிங்கங்கள் வரிசையாக உள்ளன. திருமகள் கோயில்
உள்ளது.