பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 601


     பராசர முனிவர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட சிவலிங்கத் திருமேனி -
தாலவனேஸ்வரர் - மேற்கு நோக்கியது - சதுர ஆவுடையார் - இப்
பெருமானே தலத்திற்குரிய இறைவராவார்.

     மூலவர் சந்நிதி மண்டபத்துள் நால்வர் பிரதிஷ்டை - நடராஜர்
சந்நிதிகள் உள்ளன. துவாரபாலகர்கள் முகப்பில் உள்ளனர். உள்ளே
சிவலிங்கத் திருமேனி அழகுடன் சற்று உயரமாக அருட்பொலிவுடன்
விளங்குகிறது. இக்கோயிலில் உள்ள சோமாஸ்கந்தர் திருமேனி புதுமையான
அமைப்புடையது - இடக்கையில் பழம் ஒன்றை ஏந்திய வண்ணமுள்ளது.

     இக்கோயிலில் கி.பி. 11-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கருங்கல்
திருப்பணியாகக் கட்டப்பட்டது என்றும் ; கல்வெட்டில் இக்கோயில்
“இராசேந்திரசோழப் பனையூர்” என்று குறிக்கப் பெறுகின்றது என்றும்
சொல்லப்படுகின்றது.

    
 “அணியார் தொழவல்ல வரேத்த
     மணியார் மிட றொன்று டையானூர்
     தணியார் மலர் கொண்டு இருபோதும்
     பணிவார் பயிலும் பனையூரே.”          (சம்பந்தர்)

 “வஞ்சிநுண்ணிடை மங்கை பங்கினர் மாதவர் வளரும் வளர்பொழில்
  பஞ்சின் மெல்லடியார் பயிலும் திருப்பனையூர்
  வஞ்சியும் வளர் நாவலூரன் வனப்பகைய வளப்பன் வன்றொண்டன்
  செஞ்சொற் கேட்டுகப் பார் அவரே அழகியரே.”    (சுந்தரர்)

     “திருப்பனையூரில் விருப்பன் ஆகியும்” (திருவாசகம்)

                                            - கண்டீச
     “நண் பனையூரன் புகழும் நம்ப என உம்பர் தொழும்
      தண் பனையூர் மேவும் சடாதரனே.”           (அருட்பா)


அஞ்சல் முகவரி :-

     அ/மி. சௌந்தரேஸ்வரர் திருக்கோயில்
     பனையூர் - சன்னாநல்லூர் அஞ்சல் - 609 504
     நன்னிலம் வட்டம் - திருவாரூர் மாவட்டம்.