பக்கம் எண் :

602 திருமுறைத்தலங்கள்


191/74. திருவிற்குடி

     சோழநாட்டு (தென்கரை)த் தலம்.

     (1) மயிலாடுதுறை - திருவாரூர் பேருந்துச் சாலையில், வெட்டாறு
தாண்டி, கங்களாஞ்சேரிக்குப் பிரியும் வலப்புறப் பாதையில் திரும்பி, நாகூர்-
நாகப்பட்டினம் சாலையில் சென்று, விற்குடி புகைவண்டி நிலையத்தை
(ரயில்வே கேட்டை) தாண்டி, விற்குடியை அடைந்து, ‘விற்குடி வீரட்டேசம்’
என்னும் பெயர்ப் பலகை காட்டும் பாதையில் இடப்புறமாகத் திரும்பி 2 கி.மீ.
சென்று, இடப்புறமாகப் பிரியும் (‘வளப்பாறு’ பாலத்தைக் கடந்து) சாலையில்
சென்றால் கோயிலை அடையலாம்.

     (2) நாகூர், நாகப்பட்டினத்திலிருந்து காரைக்கால் வழியாகத்
திருவாரூருக்குச் செல்லும் பேருந்தில் வந்து, விற்குடியில் கூட்ரோடில் இறங்கி
1 கி.மீ. சென்றும் கோயிலை அடையலாம். கோயில்வரை பஸ், கார் செல்லும்.
ஊரின் தென்புறம் விளப்பாறும் (ரக்த நதி) வடபுறம் பில்லாலி ஆறும்
பாய்கின்றன.

     அட்ட வீரட்டத்தலங்களுள் ஒன்று. சலந்தரனை சம்ஹரித்ததலம்.
சலந்தரனின் மனைவியான பிருந்தையை திருமால் துளசியாக ஏற்ற தலம்.
நகரத்தார் திருப்பணி பெற்று, கோயில் அழகாகவுள்ளது. மேற்கு நோக்கிய
சந்நிதி. கோயிலுள் நுழையும்போது மூலவர் சந்நிதி நேரே தெரிகின்றது.

     நல்ல கட்டமைப்புள்ள கற்கோயில்.

     இறைவன் - வீரட்டானேஸ்வரர்.
     இறைவி - ஏலவார்குழலி, பரிமள நாயகி.
     தலமரம் - துளசி.
     தீர்த்தம் - 1) சக்கரதீர்த்தம் (கோயிலின் முன்னால் உள்ளது.)
             2) சங்குதீர்த்தம் (கோயிலின் பின்புறம் உள்ளது.)

     சம்பந்தர் பாடல் பெற்றது.

     ராஜகோபுரம் ஐந்து நிலைகளையுடையது. எதிரில் சக்கர தீர்த்தம்
உள்ளது. நல்லபடித்துறைகளும் சுற்றுச்சுவரும் கொண்ட பெரிய குளம்.
தீர்த்தக்கரையில் விநாயகர் கோயில் உள்ளது. கோபுர வாயிலைக் கடந்து
உள்ளே நுழைந்ததும், எதிரில் வலப்புறமாக உள்ள முதல் தூணில் நாகலிங்கச்
சிற்பம் அழகாகவுள்ளது.