வெளிப்பிராகாரத்தில் பிருந்தையை, திருமாலுக்காக இறைவன் துளசியாக எழுப்பிய இடமும், திருமால் வழிபட்ட சிவாலயமும் உள்ளன. உள் பிராகாரத்தில் வலமாக வரும்போது மகாலட்சுமி, வள்ளி தெய்வயானையுடன் சுப்பிரமணியர் பள்ளியறை, பைரவர், சனிபகவான், தனிக் கோயில் கொண்டுள்ள பைரவர், நவக்கிரகங்கள், சூரியன் சந்நிதி, ஞானதீர்த்தமென்னும் கிணறு, பிடாரி முதலிய சந்நிதிகள் உள்ளன. சலந்தரனைச் சம்ஹரித்தமூர்த்தி - ‘ஜலந்த்ரவத மூர்த்தி - தலச்சிறப்பு மூர்த்தி (உற்சவத்திருமேனி) தரிசித்து மகிழ வேண்டிய ஒன்று. வலது உள்ளங்கையில் சக்கரம் ஏந்தியுள்ளார். ஏனையகரங்களில் மான்மழு ஏந்தி, ஒருகை ஆயுத முத்திரை தாங்கியுள்ளது. அழகான ஐம்பொன் திருமேனி - வலமாக வந்து நேரே சென்றால் மூலவர் சந்நிதி. முன்னால் இடப்புறம் அம்பாள் சந்நிதி. தெற்கு நோக்கியது. நின்ற திருக்கோலம். அபயவரதத்துடன் அமைந்த நான்கு திருக்கரங்கள். எதிரில் நந்தி உள்ளது. அம்பாள் சந்நிதியின் எதிரில் மண்டபத்தின் மேற்புறத்தில் பன்னிரு ராசிகளும் உரிய கட்டமைப்பில் அமைக்கப்பட்டுள்ளன. அபிஷேக நீர் வெளிவரும் கோமுகம், ஒரு பெண் தாங்குவது போன்ற அமைப்பில் உள்ளது. மண்டபத்தின் இடப்பால் நடராச சபை. எதிரில் (தெற்கு) வாயிலும் சாளரமும் உள்ளன. பக்கத்தில் உற்சவத் திருமேனிகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. துவார பாலகரைத் தொழுது, துவார கணபதி, சுப்பிரமணியரை வணங்கியுட் சென்றால் மூலவர் தரிசனம். மூலவர் - சுயம்பு. சதுர ஆவுடையார். மூர்த்தியின் பாணம் உருண்டையாகவுள்ளது. கோஷ்ட மூர்த்தங்களாக, பிரம்மா, மகாவிஷ்ணு, தட்சிணாமூர்த்தி, நர்த்தன விநாயகர் ஆகியோர் உளர். சண்டேசுவரர் சந்நிதி உள்ளது. நாடொறும் நான்குகால பூஜைகள் நடைபெறுகின்றன. கோயிலின் கீழ்ப்பால் மயாளேஸ்வரர் கோயில் உள்ளது. மக்கள் “மெய்ஞ்ஞானேஸ்வரர் கோயில்” என்றழைக்கின்றனர். “வடிகொள் மேனியர் வானமாமதியினர் நதியினர் மதுவார்ந்த கடிகொள் கொன்றையஞ் சடையினர் கொடியினருடை புலியதளார்ப்பர் விடையதேறும் எம்மான் அமர்ந்தினிதுறை விற்குடி வீரட்டம் அடியராகி நின்றேத்த வல்லார்தமை அருவினை அடையாவே.” (சம்பந்தர்) |