பக்கம் எண் :

630 திருமுறைத்தலங்கள்


     மாடக்கோயில். பெரியகோயில். ஊர் நடுவில் கிழக்கு நோக்கியுள்ளது.
எதிரில் சரவணப் பொய்கை. ராஜகோபுரம் ஏழுநிலைகளையுடையது.
வசந்தமண்டபமுள்ளது. விமானத்தில் தென்புறம் இருப்பது சோமாஸ்கந்த
விமானம், வடபுறமிருப்பது கேடிலியப்பர் விமானம். தலவிநாயகர்
பதரிவிநாயகர். அத்துடன் சுந்தர விநாயகரும் உள்ளார். தட்சிணாமூர்த்தி
பழைமையானது. இத்தலத்திலுள்ள ஏகபாதமூர்த்தி தனிச்சிறப்புடையது.
மூலவர் - சுயம்புத் திருமேனி. பெரிய ஆவுடையார். மெல்லிய பாணம்.
காளிஉருவம் சுதையாலானது. எதிரில் பலிபீடமுள்ளது. இத்திருமேனிக்குப்
புனுகுசட்டம், சாம்பிராணித் தைலம் சார்த்தப்படுகிறது. சோழர்காலக்
கல்வெட்டு இரண்டும் மராட்டியர் காலக் கல்வெட்டு ஒன்றும் இத்தலத்திற்குள்ளன. அவை ஆலய வழிபாட்டிற்கு மன்னர்கள் நிபந்தமாக
நிலங்களை அளித்த செய்கைகளைக் குறிக்கின்றன.

  
“கொத்துலாவியகுழல் திகழ் சடையனைக் கூத்தனைமகிழ்ந்து உள்கித்
   தொத்துலாவிய நூலணி மார்பினர் தொழுது எழு கீழ் வேளூர்ப்
   பித்துலாவிய பக்தர்கள் பேணிய பெருந் திருக்கோயில் மன்னு
   முத்துலாவிய வித்தினை ஏத்துமின் முடுகிய இடர்போமே.”
                                              (சம்பந்தர்)

     “ஆளான அடியவர்கட்கு அன்பன் தன்னை
          ஆன் அஞ்சும்ஆடியை நானபயம் புக்க
     தாளானைத் தன்ஒப்பார் இல்லாதானைச்
          சந்தனமும் குங்குமமும் சாந்துந் தோய்ந்த
     தோளானைத் தோளாத முத்துஒப்பானைத்
          தூவெளுத்த கோவணத்தை அரையிலார்த்த
     கீளானைக் கீழ்வேளூர் ஆளுங்கோவைக்
          கேடிலியை நாடும் அவர்கேடு இலாரே."       (அப்பர்)

                                          - “மிக்கமினார்
         வாளூர் தடங்கண் வயல்காட்டி யோங்குங்கீழ்
          வேளூரிற் செங்கண் விடையோனே.”          (அருட்பா)

அஞ்சல் முகவரி :-

     அ/மி. கேடிலியப்பர் திருக்கோயில்
     கீவளூர் & அஞ்சல் - 611 104
     நாகப்பட்டினம் வட்டம் - மாவட்டம்.