பக்கம் எண் :

632 திருமுறைத்தலங்கள்


     இறைவன் - தேவபுரீஸ்வரர், கதலிவனேஸ்வரர், தேவகுருநாதர்.
     இறைவி - மதுரபாஷிணி, தேன்மொழியம்மை.
     தலமரம் - வெள்வாழை (வாழையில் ஒரு வகை)
     தீர்த்தம் - தேவதீர்த்தம்.

     சம்பந்தர் பாடல் பெற்றது.

     கிழக்கு நோக்கிய மூன்று நிலைகளையுடைய ராஜகோபுரம். உட்புறத்தில்
இடப்பால் அதிகார நந்தி தரிசனம். கவசமிட்ட கொடிமரமும் நந்தி, பலிபீடம்
காட்சி. கீழே உள்சுற்றில் அறுபத்துமூவர், வலம்புரி விநாயகர், சுப்பிரமணியர்,
அகல்யை வழிபட்ட லிங்கம், மகாலட்சுமி, எதிரில் கட்டுமலை மேல் கௌதமர்
வழிபட்ட லிங்கம், நவக்கிரகம் முதலிய சந்நிதிகள் உள்ளன. நடராசசபை
தனியே அழகாக உள்ளது. கட்டுமலையின் அடிவாரத்தில் இந்திரன், முருகன்,
விநாயகர் சந்நிதிகள் பக்கத்துப் பக்கத்தில் உள்ளன.

     வலம்முடித்துப் படிகளேறி மேலே - கட்டுமலைமீது சென்றால் நேரே
சோமாஸ்கந்தர் தரிசனம். வலப்பக்கம் திரும்பி வாயிலைக் கடந்தால் மூலவர்
காட்சி. சதுரபீடம் - ஆவுடையாரின் அளவை நோக்கச்சற்று சிறியபாணம் -
அருமையான தரிசனம். சுவாமி சந்நிதிக்குப் பக்கத்தில் அம்பாள் சந்நிதி -
தனிக்கோயில். நின்ற திருக்கோலம். 6.9.1999ல் கும்பாபிஷேகம் நடந்துள்ளது.
இங்குள்ள தட்சிணாமூர்த்தியின் திருவடிக்கீழ் முயலகனில்லை - புதுமையான
அமைப்பு. நாடொறும் ஐந்துகால பூசைகள். வைகாசியில் பெருவிழா.
பாண்டியர் காலக் கல்வெட்டு இவ்வூரை “அருண்மொழித் தேவ வளநாட்டுத்
தேவூர்” என்றும் ; இறைவனை “ஆதித்தேச்சுரமுடையார்” என்றும்
குறிப்பிடுகின்றது.

     
“பண்ணிலாவிய மொழி உமைபங்கன் எம்பெருமான்
     விண்ணில் வானவர்கோன் விமலன் விடையூர்தி
     தெண்ணிலா மதிதவழ் மாளிகைத் தேவூர்
     அண்ணல் சேவடி அடைந்தனம் அல்லம் ஒன்று இலமே.”
                                             (சம்பந்தர்)

     “தேவூர்த் தென்பால் திகழ் தருதீவில்
     கோவார் கோலம் கொண்ட கொள்கையும்” (திருவாசகம்)