பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 651


முருகன் வழிபட்டதாக வரலாறு சொல்லப்படுவதால் ‘வேளூர்’ என்றும்,
‘பெருவேள்’ என்பவன் வாழ்ந்த இடமாதலின் ‘பெருவேளூர்’ என்றும் பெயர்
பெற்றதாகச் சொல்லப்படுகின்றது. வாயுவுக்கு ஆதிசேடனுக்குமிடையே நடந்த
போட்டியில் வந்து விழுந்த கயிலைச் சிகரங்களுள் இதுவும் ஒன்றாகும்.

     மோகினி வடிவம் எடுத்த திருமால், அவ்வவதார நோக்கம் நிறைவேறிய
பின்பு இறைவனை வழிபட்டுத் தன் ஆண்வடிவினைப் பெற்ற தலம் என்பர்.
திருமால் கோயில் ஆலயத்துள் உள்ளது. பிருங்கி, கௌதமர் ஆகியோர்
வழிபட்ட தலம். கோச்செங்கட் சோழனின் திருப்பணியாலான மாடக்கோயில்.
இத்தலத்திற்கு அருகில் திருவிளமர், கரவீரம், தலையாலங்காடு, எண்கண்
முதலிய தலங்கள் உள்ளன. சிறிய கிராமம்.

     இறைவன் - அபிமுக்தீஸ்வரர், பிரியாஈஸ்வரர்.
     இறைவி - அபின்னாம்பிகை, ஏலவார்குழலி.
     தலமரம் - வன்னி.
     தீர்த்தம் - சரவணப் பொய்கை. கோயிலின் பின்புறமுள்ளது.

     சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற தலம்.

     ராஜகோபுரம் மூன்று நிலைகளோடு, திருப்பணி முடிந்து அழகோடு
காட்சியளிக்கிறது. கிழக்கு நோக்கிய சந்நிதி. கோபுரத்துள் நுழைந்ததும்
கொடிமர விநாயகர் - வெள்ளை விநாயகர் காட்சியளிக்கிறார். நந்தி, பலிபீடம்
மட்டும் உள்ளன. பிராகாரத்தில் விநாயகர் சந்நிதிகள், பக்கத்தில் வைகுந்த
நாராயணப் பெருமாள் சந்நிதியும் உள்ளன. இச்சந்நிதியில் மூல, உற்சவத்
திருமேனிகள் உள்ளன. வள்ளி தெய்வயானையுடன் சுப்பிரமணியர் சந்நிதியை
அடுத்து அம்பாள் சந்நிதி தனிக்கோயிலாக கிழக்கு நோக்கி உள்ளது. அடுத்து
நவக்கிரக சந்நிதிகள், சனிபகவான், க்ஷேத்திரபைரவர், சூரியன், நால்வர்,
மகாலிங்கம், சரஸ்வதீசர், ஜம்புகேஸ்வரர், ஐராவதீஸ்வரர், பிரம்மபுரீஸ்வரர்,
துர்க்கை முதலிய சந்நிதிகள் உள்ளன.

     தரிசித்துப் படிகள் ஏறி மேலே சென்றால் நேரே சோமாஸ்கந்தர் சந்நிதி.
வலப்பால் திரும்பி, வாயில் நுழைந்தால் நேரே நடராஜ சபை உள்ளது.
இம்மண்டபம் ‘வௌவால் நெத்தி மண்டபம்’ அமைப்புடையது. மண்டபத்தில்
தூணில் துவார கணபதி உள்ளார். துவார பாலகர் உருவங்கள் இருபுறமும்
உள. மூலவர் - சுயம்பு. சதுர ஆவுடையார். மூலவருக்கு நேர் எதிரில்
சாளரம் வைக்கப்பட்டுள்ளது.