நான்கு மயானங்களுள் இது ஒன்று. மற்ற மூன்றும் (1) கச்சிமயானம் (2) கடவூர்மயானம் (3) காழிமயானம் என்பவை. இறைவன் - ஞானபரமேஸ்வரர். இறைவி - ஞானாம்பிகை தீர்த்தம் - ஞானதீர்த்தம் சம்பந்தர் பாடல் பெற்றது. ஆபஸ்தம்பரிஷி வழிபட்ட சிறப்புடையது. சிறிய ஊர். சோழர் பாணியில் அமைந்த கோயில். கிழக்கு நோக்கியது. எதிரில் ஞானதீர்த்தம் உள்ளது. கருவறை சதுர அமைப்புடையது. விமானம் உருண்டை வடிவம். தூண்கள், பேதிகைகள் முதலியன மிக்க அழகுடையன. கல்வெட்டில் இத்தலம் “செற்றூர்க் கூற்றத்துப் பிரமதேயம்” என்றும், இறைவன் பெயர் ‘மயானத்துப் பரமசுவாமி’ என்றும் குறிக்கப்பட்டுள்ளது. (நாலூர் - வைப்புத்தலம். சுவாமி - பலாசவனநாதர், கிழக்கு பார்த்த சந்நிதி. படிகளேறிச் சென்று மூலவரைத் தரிசிக்கிறோம். சுயம்புத் திருமேனி - மேனியில் ரேகைகள் உள்ளன. அம்பாள் பெரிய நாயகி தெற்கு பார்த்த சந்நிதி. தலமரம் - பலாசு - கஜப்பிரஷ்ட விமானம்.) “கோலத்தார் கொன்றையான் கொல்புலித்தோலாடையான் நீலத்தார் கண்டத்தான் நெற்றியோர் கண்ணான் ஞாலத்தார் சென்றேத்து நாலூர் மயானத்தில் சூலத்தான் என்பார்பால் சூழாவாம் தொல்வினையே.” (சம்பந்தர்) - “வேறுபடாப் பாலூர் நிலவிற் பணிலங்கள் தன்கதிர்செய் நாலூரில் அன்பர் பெறு நன்னயமே.” (அருட்பா) அஞ்சல் முகவரி:- அ/மி. ஞானபரமேஸ்வரர் திருக்கோயில் நாலூர் மயானம் திருச்சேறை அஞ்சல் - 612 605 குடவாசல் வட்டம் - திருவாரூர் மாவட்டம். |