சோழநாட்டு (தென்கரை)த் தலம். குடவாசல் - வலங்கைமான் பேருந்துச் சாலையில் சென்று இக்கோயிலையடையலாம். குடமுருட்டியாற்றின் கரையில் உள்ள தலம். ‘குடமுருட்டி’க்குப் பழைய பெயர் ‘கடுவாய்’. புத்தூர் - என்பது ஊர்ப்பெயர். இப்பெயரில் பல ஊர்களிருப்பதால், வேறுபாடு தெரிவதற்காக இத்தலம் ‘கடுவாய்க்கரைப்புத்தூர்’ என்று வழங்கலாயிற்று. நகரத்தார் திருப்பணி பெற்ற தலம். கோயில் ஊரின் மத்தியில் கிழக்கு நோக்கியுள்ளது. காசிப முனிவர் வழிபட்டது. இறைவன் - சொர்ணபுரீஸ்வரர் இறைவி - சொர்ணாம்பிகை, சிவாம்பிகை தலமரம் - வன்னி தீர்த்தம் - திரிசூல கங்கை (கோயிலின் வலப்புறம் உள்ளது.) அப்பர் பாடல் பெற்றது. ராஜகோபுரம் ஐந்து நிலைகளுடன் காட்சியளிக்கிறது. கோபுர வாயிலில் சித்தி விநாயகர் உள்ளார். கொடிமரம் நந்தி பலிபீடங்கள் உள்ளன. முன் மண்டபம் கருங்கல்லால் ஆனது. சுவாமி, அம்பாள் சந்நிதிகள் உயரமான இடத்தில் அமைந்துள்ளன. அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியுள்ளது. “ஒருத்தனை மூவுலகொடு தேவர்க்கும் அருத்தனை அடியேன் மனத்துள் அமர் கருத்தனைக் கடுவாய்ப் புனலாடிய திருத்தனைப் புத்தூர்ச் சென்று கண்டுய்தெனே.” (அப்பர்) - “மேலூரும் நோய்க்கரையுட் செய்யாத நோன்மையோர் சூழ்ந்த கடு வாய்க்கரையுண் மேவுகின்ற வண்மையே.” (அருட்பா) அஞ்சல் முகவரி:- அ/மி. சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில் ஆண்டார் கோயில் & அஞ்சல் வலங்கைமான் S.O. 612 804. திருவாரூர் மாவட்டம். |