திருவிடைமருதூர் (மத்தியார்ச்சுன) மகாலிங்கப் பெருமானுக்குப் பரிவாரமாக உள்ள தலங்களுள் இதுவும் ஒன்று. ஏனையவை:- (1) திருவலஞ்சுழி (விநாயகர்) (2) திருவேரகம் (முருகன்) (3) திருவாவடுதுறை (நந்தி) (4) சூரியனார் கோயில் (நவக்கிரகம்) (5) சேய்ஞலூர் (சண்டேஸ்வரர்) (6) தில்லை (நடராசர்) (7) சீர்காழி (பைரவர்) (8) திருவாரூர் (சோமாஸ் கந்தர்) என்பன. பஞ்ச ஆரண்யத்தலங்களுள் இதுவும் ஒன்று. குருபெயர்ச்சி ஆராதனை, சித்திரைப் பௌர்ணமி விழா, தைப்பூசம், பங்குனி உத்திரம் முதலிய திருவிழாக்கள் சிறப்பாக நடைபெறுகின்றன. தட்சிணாமூர்த்திக்குத் தேர்விழா நடைபெறுகிறது. “நச்சித் தொழுவீர்காள் நமக்கிது சொல்லீர் கச்சிப் பொலி காமக்கொடியுடன் கூடி இச்சித்து இரும்பூளை இடங்கொண்ட ஈசன் உச்சித்தலையில் பலி கொண்டுழல் ஊணே.” (சம்பந்தர்) “பொல்லாத பாவங்கள் கோடானகோடி இப் புவிமிசையிலோர் வடிவமாம் புலையனேனுனை மறந்தனு தினஞ்செய்து வரும் பொல்லாத வினையெண்ணிலேன் அல்லாரு மலமாயை கருமங்களணுகாத அகள நிஷ் பிரபஞ்சமாம் அகளங்க சுத்த நித்யானந்த அநுபவம் அணுவளவு (ம்) வந்ததில்லை நல்லார் முன் அணுகாத யமதூதர் கொண்டு போய் நரகிலே விடுவரென்று நடுநடுங்கா நின்றதுள்ள முனைநம்பினேன் நம்பினேன் வட கயிலையாய் உல்லாச பரமகுரு நாதனே ஆலடியில் உறைகின்ற பரதெய்வமே ஒன்றாகி ஆனந்த உருவாகி என்னுயிர்க்(கு) உயிரான பரமசிவமே.” (தட்சிணாமூர்த்தி திருவருட்பா) - “வாய்த்த பெரும்பூகந் தெங்கிற்பிறங்க வளங் கொள்ளும் இரும்பூளை மேவியிருந்தோய்.” (அருட்பா) |