சம்பந்தர் பாடல் பெற்றது. விசுவாமித்திரர் வழிபட்ட தலம். ஆலகால விஷத்தை இறைவன் உண்டு தேவர்களைக் காத்தபிரான் உள்ள தலம். இதனால் ஆலங்குடி என்றாயிற்று என்பர். இதற்குச் சான்றாகச் சொல்லப்படும் காளமேகப் புலவர் பாடல் வருமாறு. “ஆலங்குடியானை ஆலாலம் உண்டானை ஆலங் குடியான் என்று ஆர் சொன்னார் - ஆலம் குடியானேயாகில் குவலயத்தோரெல்லாம் மடியாரோ மண் மீதினில்.” இவ்வூரில் விஷத்தால் எவர்க்கும் எவ்விதத் தீங்கும் உண்டாவதில்லை என்று சொல்லப்படுகிறது. ஆலயம் ஊரின் நடுவே அழகாக, ஐந்து நிலைகள் கொண்ட ராஜகோபுரத்துடன் காட்சியளிக்கின்றது. அழகான கோயில் சிற்பங்கள் அதிகம் உள்ளன. உள்ளே நுழைந்ததும் மேலக்குடவரையில் “கலங்காமல் காத்த விநாயகர்” காட்சி தருகிறார். வணங்கி உள் நுழைந்தால் அம்பாளின் தெற்கு நோக்கிய சந்நிதி. இரண்டாம் வாயிலைக் கடந்தால் சூரியன் சந்நிதி உற்சவ சுந்தரர் தரிசனம். உள் பிராகாரத்தில் நால்வர், சூரியர். சோமேசர், குருமோட்சேஸ்வரர், சோமநாதர், சப்தரிஷிநாதர், விஷ்ணுநாதர், பிரமீசர் ஆகிய சப்தலிங்கங்களோடு காசிவிசுவநாதரும் விசாலாட்சி அகத்தியரும் உள்ளனர். ஆக்ஞாகணபதி, சோமாஸ்கந்தர், பெரிய வடிவோடுகூடிய விநாயகர், சுப்பிரமணியர், சண்டேஸ்வரர், கல்யாணசாஸ்தா, சப்த மாதாக்கள் முதலிய உற்சவமூர்த்தங்களும் உள்ளன. சபாநாதர் சந்நிதியில் திருமுறைக் கோயில் உள்ளது. உற்சவ தட்சிணாமூர்த்தி சனகாதி நால்வருடன் காட்சி தருகின்றார். சுவாமி மகாமண்டபத்தில் நந்தி பலிபீடம் செப்புத் திருமேனியுடன் உள்ளது. மகாமண்டப வாயிலில் துவார பாலகர்களும் உளர். ஆபத்சகாயர் கிழக்கு நோக்கிய சந்நிதி. இத்தலத்துச் சிறப்புடைய தட்சிணாமூர்த்தி தெற்கு கோஷ்டத்திலுள்ளார். மேற்கில் இலிங்கோற்பவரும், வடக்கில் பிரம்மாவும், துர்க்கையும் உளர். ‘ஞானகூபம்’ என்னும் தீர்த்தக் கிணறு உள்ளது. சுக்கிரவார அம்மன் சந்நிதி, சனீஸ்வரர் சந்நிதி, வசந்த மண்டபம், சப்தமாதா ஆலயமும் உள்ளன. இத்தலத்தின் கிழக்கே ‘பூளைவள ஆறு’ பாய்கிறது. ஐப்பசியில் இதன் தீர்த்தத்தைக் கொண்டு வந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்கிறார்கள். |