பக்கம் எண் :

668 திருமுறைத்தலங்கள்


     வெளிப்பிராகாரத்தில் விநாயகர் சந்நிதி உள்ளது. தட்சிணாமூர்த்தி
சந்நிதி, தனிச் சந்நிதியாக உள்ளது. எதிரில் வன்னி மரம் உள்ளது. கோயிலின்
முன்னும் பின்னுமாக இரு வன்னி மரங்கள் உள்ளன. மூலவர் திருவாயிலுக்கு
வலப்பால் கஜலட்சுமி திருமேனி உள்ளது. சுவாமி, அம்பாள் சந்நிதிகள்
பக்கத்துப் பக்கத்திலேயே கிழக்கு நோக்கி உள்ளன.

     மூலவர் - சிவலிங்கத் திருமேனி. இதன் முன்னால் சற்றுப் பக்கவாட்டில்
வட்டமாகக் கல் இட்டி மூடியுள்ள இடமே, அரி - துவாரம் (பிலம்) என்றும்,
இவ்வழி அரி, வராகமாகத் தோண்டிச் சென்ற ஐதீகமாகவும் சொல்லப்படுகிறது.

     அம்பாள் சந்நிதி - நின்ற திருக்கோலம். அம்பாள் சந்நிதிக்கு நேரே
தனிக் கோபுர வாயில் உள்ளது. இத்திருக்கோயிலில் மூன்றாம் குலோத்துங்க
சோழனின் கல்வெட்டு உள்ளதென்பர் கல்வெட்டு ஆய்வாளர்.

     
“மண்ணர் நீரார் அழலார் மலிகாலினார்
     விண்ணர் வேதம் விரித் தோதுவார் மெய்ப் பொருள்
     பண்ணர் பாடல் உடையார் ஒரு பாகமும்
     பெண்ணர் கோயில் அரதைப்பெரும் பாழியே.”     (சம்பந்தர்)

                                 - “விரும்பும்
     விரதப் பெரும்பாழி விண்ணவர் களேத்தும்
     அரதைப் பெரும்பாழி ஆர்ந்தோய்.”           (அருட்பா)


அஞ்சல் முகவரி:-

     
அ/மி. பாதாளேஸ்வரர் திருக்கோயில்
     ஹரித்வாரமங்கலம் & அஞ்சல் 612 802
     குடந்தை வட்டம் - தஞ்சை மாவட்டம்.

217/100. அவளிவணல்லூர்

     சோழநாட்டு (தென்கரை)த் தலம்.

     1) கும்பகோணம், தஞ்சாவூர் ஆகிய ஊர்களிலிருந்து இத்தலத்திற்குப்
பேருந்து வசதிகள் உள்ளன.

     2) கும்பகோணத்திலிருந்து அம்மாப்பேட்டை செல்லும் நகரப் பேருந்து
இத்தலத்தின் வழியாகச் செல்கிறது.