3) தஞ்சையிலிருந்து அரித்துவார மங்கலம் செல்லும் நகரப் பேருந்தும் இத்தலத்தின் வழியாகச் செல்கிறது. 4) அரித்துவார மங்கலத்திலிருந்து 3 கி.மீ. மன்னார்குடி சாலையில் சென்றால் இவ்வூரையடையலாம். சாலை ஓரத்திலேயே கோயில் உள்ளது. அவள் - இவள் - நல்லூர் என்பது ஊர்ப் பெயர். இப்பெயர் பற்றிய வரலாறு பின்வருமாறு:- “பண்டைநாளில் இத்தலத்தில் இறைவனைப் பூசித்து வந்த ஆதி சைவ அந்தணர் ஒருவருக்கு இரு பெண்கள் இருந்தனர். மூத்த பெண்ணை ஒருவருக்கு மணம் முடித்தார். மணந்து கொண்டவர் சிறிது காலங்கழித்து, காசி யாத்திரை சென்றார். அக்காலத்தில் மூத்த பெண்ணுக்கு அம்மை வார்க்கப்பெற்று, உருவம் மாறியதோடு கண்களையும் இழந்தாள். இரண்டாவது பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. சில ஆண்டுகள் கழித்து, காசியாத்திரை சென்றிருந்த மூத்த மருமகன் வீடு திரும்பினார். தன் மனைவியின் உருவ வேறுபாட்டைக்கண்டு, “ இவள் என் மனைவியல்லள், இளையவளே என் மனைவி” என்று வாதிட்டார். மனங்கலங்கிய ஆதிசைவர் இறைவனைப் பிரார்த்திக்க, இறைவன் காட்சி தந்து மனந்தடுமாறிய மருமகனைப் பார்த்து, மூத்தவளே அவர் மனைவி என்னும் பொருளில் “அவள் இவள்” என்று சுட்டிக் காட்டி மறைந்தார். மேலும் இறைவன் “அருளியவாறு மூத்தவளும் இத்தலத்துத் தீர்த்தத்தில் மூழ்கிப் பண்டைய உடலும் கண்களும் பெற்றாள்; கணவனுடனும் சேர்ந்து இன்புற்று வாழ்ந்தாள்.” இத்தலத்திற்குப் ‘புல்லாரண்யம்’, ‘சாட்சிநாதபுரம்’, ‘பாதிரிவனம்’ எனப் பலபெயர்களுண்டு. திருமால், காசிபமுனிவர், முருகன், சூரியன், அகத்தியர், கண்வமகரிஷி ஆகியோர் வழிபட்ட தலம். இறைவன் - சாட்சிநாதர் இறைவி - சௌந்தரநாயகி, சௌந்தரவல்லி தீர்த்தம் - சந்திர தீர்த்தம். கோயிலுக்கு எதிரில் உள்ளது. தலமரம் - பாதிரி. மதிலுக்குப் பக்கத்தில் உள்ளது. சம்பந்தர், அப்பர் ஆகியோர் பாடல் பெற்ற தலம். ராஜகோபுரமில்லை. கோயில் முகப்பு கிழக்கு நோக்கியது. உள்ளே நுழைந்தவுடன் வெளிச்சுற்றில் அம்பாள் சந்நிதி தெற்கு |