பக்கம் எண் :

670 திருமுறைத்தலங்கள்


     நோக்கியுள்ளது. நின்ற திருக்கோலம். வழிபட்டுச் சென்றால் முகப்பில்
விநாயகர் ஒருபுறமும், துவார பாலகர்களாக ‘ஆட்கொண்டார்’,
‘உய்யக்கொண்டார்’ உருவங்களும் உள்ளன. உள்ளே நுழைந்தால் நேரே
மூலவர் காட்சி தருகிறார். மூலவர் - சுயம்பு மூர்த்தி, கிழக்கு நோக்கியது.
உள்ளும் துவாரபாலகர்கள் உள்ளனர். மூலவருக்குப் பின்னால்
தலவரலாற்றின்படி சாட்சி சொன்ன நிலையில் சாக்ஷிநாதராக - ரிஷபாரூடர்,
பார்வதி காட்சி தருகின்றனர்.

     உள்சுற்றில் விநாயகர், நால்வர் சந்நிதிகள், பரவையாருடன், கண்வ
முனிவர், வீரபத்திரர், சப்தகன்னியர், அறுபத்துமூவர் மூலத்திருமேனிகள்
ஆகிய சந்நிதிகள் உள்ளன. சோமாஸ்கந்தர், விநாயகர், சிவகாமி, நால்வர்,
ஆறுமுகர், மகாலட்சுமி ஆகிய உற்சவத் திருமேனிகள் பாதுகாத்து
வைக்கப்பட்டுள்ளன. நடராசர் சந்நிதி உள்ளது. பக்கத்தில் குமாரலிங்கம்,
காசிவிசுவநாதர், விசாலாட்சி, தபஸ்அம்பாள் திருமேனிகள் உள்ளன. எதிரில்
நவக்கிரக சந்நிதிகள் உள்ளன. கால பைரவர், சூரியன் சந்நிதிகள் உள.
கோஷ்டமூர்த்தங்களாக அகத்தியர், தட்சிணாமூர்த்தி, இலிங்கோற்பவர்,
பிரமன், துர்க்கை ஆகியோர் உளர். எதிரில் சண்டேஸ்வரர் சந்நிதி உள்ளது.

     தை அமாவாசையன்று பிரம்மோற்சவம் ஏகதின (ஒருநாள்) உற்சவமாக
நடத்தப்படுகின்றது. மூன்றாம் இராசேந்திரனின் கல்வெட்டுக்களில் (கி.பி. 1246-
1279) இக்கோயிலைப் பற்றிய குறிப்புக்கள் உள்ளன. கல்வெட்டில் இறைவனின்
பெயர் ‘தம்பரிசுடையார்’ என்று குறிக்கப்படுகிறது.

    
 “துஞ்சல்இலராய் அமரர் நின்று தொழுதுஏத்த அருள்செய்த
     நஞ்சுமிடறுண்டு கரிதாய வெளிதாகியொரு நம்பன்
     மஞ்சுற நிமிர்ந்துமை நடுங்க அகலத்தொடு அளாவி
     அஞ்ச மதவேழ உரியான் உறைவது அவளிவள் நல்லூரே”
                                            (சம்பந்தர்)

     “நன்மைதான் அறியமாட்டான் நடுவிலா அரக்கர் கோமான்
     வன்மையே கருதிச்சென்று வலிதனைச் செலுத்தலுற்றுக்
     கன்மையான் மலையையோடிக் கருதித்தான் எடுத்துவாயால்
     அம்மையோ என்ன வைத்தார் அவளிவணல்லூராரே."   (அப்பர்)

                                         - சரதத்தால்
     ஏதும் அவள் இவள் என்று எண்ணாதவர் இறைஞ்சி
     ஓதும் அவளிவணல் லூருடையோய்.”     (அருட்பா)