பக்கம் எண் :

688 திருமுறைத்தலங்கள்


     வாயிலின் இருபுறங்களிலும் சங்கநிதி, பதுமநிதி மூர்த்தங்கள் உள்ளன.
துவாரபாலகர் தொழுது, வாயில் கடந்தால் வலப்பால் உற்சவ மூர்த்தங்களின்
பாதுகாப்பிடத்தைத் தரிசிக்கலாம்.

     நேரே மூலவர் தரிசனம், சதுரபீடம் - சுயம்பு மூர்த்தியாதலின் சொர
சொரப்பாக வெண்ணிறமாகக் காட்சி தருகின்றார். வெளிச்சுற்றில் தலமரம் -
மா - உள்ளது. நாடொறும் நான்கு கால வழிபாடுகள் வைகாசியில் பெருவிழா,
நடைபெறுகிறது.

     விக்கிரம சோழன், மூன்றாம் குலோத்துங்கன், சுந்தரபாண்டியன்
ஆகியோர் காலத்திய கல்வெட்டுக்கள் உள்ளன. இவற்றில் சுவாமியும்
அம்பாளும் ‘திருவுசாத்தானமுடைய நாயனார், பெரிய நாச்சியார்’ என்னும்
பெயர்களால் குறிக்கப்படுகின்றனர். இறையிலியாக நிலங்களும் தோப்புகளும்
இக் கோயிலுக்கு வழங்கப்பட்ட செய்திகள் கல்வெட்டுக்களிலிருந்து தெரிய
வருகின்றன. தலபுராணம் - சூதவனப் புராணம் உள்ளது. வாரந்தோறும்
வெள்ளிக்கிழமை, மாதகார்த்திகை, பிரதோஷம், சித்திரைப்பெருவிழா,
ஆடிப்பூரம், ஆவணி சூலம், விநாயக சதுர்த்தி, நவராத்திரி, சஷ்டி, மார்கழி
திருவாதிரை, தைப்பூசம், மாசிமகம் போன்ற விழாக்களும் குறிப்பாக
நடைபெறுகின்றன.

     முதல் நிலைக் கோயில். அறநிலையத் துறையின் நிர்வாகத்தில்
உள்ளது. 1081 ஏக்கர் நன்செய், 1018 ஏக்கர் புன்செய் நிலங்களும் -
தென்னந்தோப்புகளும் - 36 கபடிடஸ்களும் - 229 மனைக்கட்டுகளும்
இக்கோயிலுக்குச் சொந்தமாகவுள்ளன. பொன், வெள்ளி நகைகள், நகரத்தார்
அளித்துள்ள நன்கொடைகள், வெள்ளிக் கவசங்களும் உள்ளன. இக்கோயில்
நிர்வாகத்தில் முத்துப்பேட்டையில் அ/மி. பெரியநாயகி மகளிர் மேல்நிலைப்
பள்ளி நடைபெற்று வருகிறது.
                                  (ஆதாரம் - தலவரலாறு)

     ‘நீரிடைத் துயின்றவன், தம்பி, நீள்சாம்புவான்
     போருடைச் சுக்ரீவன் அநுமன் தொழக்
     காருடை நஞ்சுண்டு காத்தருள் செய்தஎம்
     சீருடைச் சேடர் வாழ் திருவுசாத்தானமே.”    (சம்பந்தர்)

                              - “கற்றவர்கள்
     எங்குமு சாத்தானம் இருங்கழக மன்றமுதல்
     தங்கும் உசாத்தானத் தனிமுதலே”     (அருட்பா)