பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 687


     தீர்த்தம் - அநுமன் தீர்த்தம், மார்க்கண்டேய தீர்த்தம், கௌதம
தீர்த்தம்.

     சம்பந்தர் பாடல் பெற்றது.

     இந்திரன், விசுவாமித்திரர், இராமர், இலக்குவன், ஜாம்பவான், சுக்ரீவன்,
அநுமன் ஆகியோர் வழிபட்டது. விசுவாமித்திரருக்கு நடனக் காட்சி
காட்டியருளிய தலம். இராமர் சேது அணை கட்டுவதற்கு இத்தலத்து
இறைவனிடம் மந்திர உபதேசம் பெற்றதாக வரலாறு. எனவே இறைவன்
திருப்பெயர் மந்திரபுரீஸ்வரர் என்று வழங்குகிறது. மற்றும் கடலில் அணை
கட்டுவதற்குரிய வழிமுறைகளை இராமபிரான் இப்பெருமானிடம் உசாவிய
(கேட்டறிந்த) காரணத்தால் இத்தலம் ‘உசாத்தானம்’ என்று பெயர் பெற்றது.
இவ்வரலாற்றுக்கு ஆதரவாக இவ்வூருக்கு அருகில் இராமன் கோயில்,
சாம்பவான் ஓடை, அநுமான் காடு, சுக்ரீவன்பேட்டை, தம்பிக்குநல்லான்
பட்டினம் முதலிய ஊர்கள் உள்ளன. இறைவன் மாமரத்தினடியில் திகழ்வதால்
இத்தலம் சூதவனம் என்றும் சொல்லப்படுகிறது. இதற்கேற்ப தலவிநாயகர்
மாவிலையைக் கரத்தில் ஏந்தியுள்ளார்.

     கோயில் மிக்க பொலிவோடு அழகுறக் காட்சியளிக்கிறது. கிழக்கு
நோக்கியது. எதிரில் திருக்குளம். குளக்கரையில் விநாயகர் சந்நிதி.
ராஜகோபுரம் ஐந்து நிலைகளுடையது. உட்புறத்தில் இடப்பால் சிறிய தீர்த்தம்,
வலப்பாகத்தில் அம்பாள் கோயில் உள்ளது தனிக்கோயில். கவசமிட்ட
கொடிமரம், பலிபீடம் நந்தி தரிசனம்.

     இரண்டாங்கோபுரம் மூன்று நிலைகளையுடையது. துவார கணபதி,
சுப்பிரமணியரைத் தொழுது, உள்புகும்போது வாயிலில் இடப்பால் அதிகார
நந்தி காட்சி தருகிறார்.

     உள்வலத்தில் சூரியன், தலப்பதிகக் கல்வெட்டுக்கள், அறுபத்து மூவர்,
(நேர் எதிரில் கருவறைச் சுவரில் ஜ்வரஹரேஸ்வரர் மூன்று முகங்களுடனும்
மூன்று திருவடிகளுடன் காட்சி தருகிறார் - அழகான உருவம், தரிசிக்கத்தக்கது.) காட்சி கொடுத்த நாயகர் அம்பாளுடன், சப்த மாதர்கள்,
சப்த கன்னியர், வீரபத்திரர், காளி, காசிவிசுவநாதர், சூதவன விநாயகர்,
சோமாஸ்கந்தர், வருணன் அவர் வழிபட்ட லிங்கம், இராமர் அவர் வழிபட்ட
லிங்கம், மார்க்கண்டேயர் அவர் வழிபட்ட லிங்கம், அன்னபூரணி,
சுப்பிரமணியர், வள்ளி தெய்வயானையுடன் காட்சி தரும் சுப்பிரமணியர்,
கஜலட்சுமி, சரஸ்வதி, நவகன்னியர், சனிபகவான், நடராச சபை, பைரவர்,
சந்திரன் முதலிய சந்நிதிகள் உள்ளன.

    உள்வலமுடித்து முன்மண்டபம் அடைந்தால் அங்குத் தல வரலாறு
வண்ண ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளதைக் காணலாம்.