பக்கம் எண் :

708 திருமுறைத்தலங்கள்


     ராஜகோபுரமில்லை. முகப்பு வாயில் வழியாக உட்சென்றால் பலிபீடம்
நந்தி மட்டுமே உள்ளது. கொடிமரமில்லை. பிராகாரத்தில் வள்ளி
தெய்வயானை சமேத வில்லேந்திய சுப்பிரமணியர், மகாலட்சுமி, சனிபகவான்,
பைரவர் சந்நிதிகள் உள்ளன. நவக்கிரகங்கள் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன.
விநாயகர், காசிவிசுவநாதரை வணங்கி வலம் முடித்து உட்சென்றால் நேரே
மூலவர் தரிசனம். மேற்கு பார்த்த சந்நிதி. சிவலிங்கத் திருமேனி சற்று சிவந்த
நிறமாகவுள்ளது. (அக்கினி வழிபட்டது) குட்டையான சிறிய பாணம். சுவர்
ஓரத்தில் நால்வர் சந்நிதி உள்ளது.

     சந்நிதிக்கு முன்னால் இடப்பால் அம்பாள் சந்நிதி உள்ளது. சிறிய
திருமேனி. நின்ற திருக்கோலம். உற்சவத் திருமேனிகள் பாதுகாத்து
வைக்கப்பட்டுள்ளன. நடராசர், சிவகாமி, சனீஸ்வரர் காகவானத்துடன்,
விநாயகர் முதலிய திருமேனிகள் உள்ளன.

     கோஷ்ட மூர்த்தங்களாக பிரம்மா, இலிங்கோற்பவர், தட்சிணாமூர்த்தி,
விநாயகர், துர்க்கை ஆகியோர் காட்சி தருகின்றனர். இலிங்கோற்பவருக்குப்
பக்கத்தில் பிரம்மாவும் விஷ்ணுவும் நின்று காட்சி தருகின்றது விசேஷ
அமைப்பாகவுள்ளது.
விநாயகருக்குப் பக்கத்தில் சுவரில், சிவலிங்கத்தை, ரிஷி
ஒருவர் வழிபடுவது போன்று ஒரு சிற்பம் உள்ளது. கோயிலில் விசாரித்ததில்
அகத்தியர் வழிபடும் கோலம் என்கின்றனர்.

     நாடொறும் நான்கு கால வழிபாடுகள் நடைபெறுகின்றன. ஸ்ரீ காஞ்சி
காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்
அவர்களின் பொன்விழாத் திட்டத்தில் இடம்பெற்றுத் திருப்பணிகள்
நடைபெற்றுப் பொலிவுடன் காட்சி தருகின்றது. ஊர் மக்களும் இப்பணிகளுக்கு
உதவியுள்ளனர். இத் தலத்து இறைவனருளால் சனிதோஷம் நீங்கப் பெற்ற
திரிபுவனசக்கரவர்த்தி, தானமாகத் தந்த 120 ஏக்கர் நன்செய் (கோயிலைச்
சுற்றி) இன்று கோயில் நிர்வாகத்தில் உள்ளது.

     இத்தலத்திற்குப் பக்கத்தில் நெல்லிக்காவும், தெங்கூரும் உள்ளன.
இக்கோயில் குருக்கள் திருத்தெங்கூரில் உள்ளார். கோயிலைக் காணச்
செல்வோர் அவருக்குத் தெரிவித்து, உடன் அழைத்துச் செல்லுதல் வேண்டும்.

    
 “பஞ்சு தோய்மெல்லடிப் பாவையாளொடும்
     மஞ்சுதோய் கயிலையுள் மகிழ்வர் நாடொறும்
     வெஞ்சுன மருப்பொடு விரைய வந்தடை
     குஞ்சரம் உரித்தனர் கொள்ளிக்காடரே.”    (சம்பந்தர்)