தனிக்கோயில், உள்வாயிலைத் தாண்டிச் சென்றால் நேரே மூலவர் தரிசனம். பிராகாரத்தில் சோமாஸ்கந்தர், விநாயகர், சுப்பிரமணியர், மகாலட்சுமி, நவக்கிரகங்கள் வழிபட்ட லிங்கங்கள், நவக்கிரக சந்நிதி முதலியவைகள் உள்ளன. நடராசசபை உள்ளது. பைரவர், சூரியன் சந்நிதிகளும் உள. துவாரபாலகர்களையும், விநாயகரையும், சுப்பிரமணியரையும் வணங்கி உட்சென்று மூலவரைத் தரிசிக்கின்றோம். கிழக்கு நோக்கிய சந்நிதி, சற்று உயர்ந்த பாணமுடைய சிவலிங்கத் திருமேனி. அக்க மணிமாலையும், திருநீற்றுப் பட்டமும், வெள்ளியாலான பிறையும், வில்வதளமும் சார்த்தப் பட்டுத் தரிசிக்கும்போது எடுப்பான திருக்கோலம் உள்ளத்திற்குச் சாந்தியைத் தருகின்றது. கோஷ்ட மூர்த்தங்களாக, நர்த்தனவிநாயகர், தட்சிணாமூர்த்தி, இலிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உளர். நாடொறும் ஆறு கால பூஜைகள் நடைபெறுகின்றன. வைகாசி விசாகத்தில் பெருவிழா - ஏகதினவிழா உற்சவமாக நடைபெறுகிறது. அகில் உள்ள திருமுறைத் தலங்கள் திருநெல்லிக்கா, திருக்கொள்ளிக்காடு என்பன. திருத்தேங்கூர்த்தல புராணம் உள்ளது. இக்கோயில் திருப்பணிகள் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்களின் பொருளுதவியாலும் ஊர்மக்களின் பேராதரவாலும் நடைபெற்றுள்ளன. மூன்றாம் ராசராசன் மூன்றாம் குலோத்துங்கன், மூன்றாம் ராசேந்திரன் காலத்திய கல்வெட்டுக்கள் இக்கோயிலுக்கு விளக்கெரியவும், விழா எடுக்கவும் நிபந்தங்கள் அளித்த செய்திகளைக் குறிப்பிடுகின்றன. “புரைசெய் வல்வினை தீர்க்கும் புண்ணியர் விண்ணவர் போற்றக் கரைசெய் மால் கடல் நஞ்சையுண்டவர் கருதலர் புரங்கள் நிரைசெய்து ஆரழலூட்டி யுழல்பவர் இடுபலிக்கெழில் சேர் விரைசெய் பூம்பொழில் தேங்கூர் வெள்ளியங்குன்ற மாந்தரே” (சம்பந்தர்) “மருவேழம் புராசி யெழு வரையேழும் வலமயிலோன் வருமுன் தான்போய் ஒருவேழந்தரு பரனை உமையை வலம் வந்து கனியுடன் கொண்டோனைப் பெருவேழந் தீர்த்தன்பு தருமோம் பனைப்பசுந்தேன் பிலிற்றுத் தூற்றுங் கருவேழ மருந்து துகிர்ச் செவ்வேழ முகத்தானைக் கருத்துள் வைப்பாம்.” (விநாயகர்துதி - தலபுராணம்) |