சோழநாட்டு (தென்கரை)த் தலம். 1) திருவாரூர் - திருத்துறைப்பூண்டி (வழி கீவளூர்) சாலையில் உள்ள தலம். சாலையோரத்திலேயே கோயில் உள்ளது. 2) திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலையில் புலிவலம், மாவூர் வழியாகவும் இத்தலத்திற்கு வரலாம். இரண்டுமே நல்ல பாதைகள். திருவாரூரிலிருந்து 10 கி.மீ. கொன்றைவனம், வில்வவனம், ஏகச்சக்கரபுரம், முந்நூற்றுமங்கலம் முதலியன இப்பதியின் வேறு பெயர்கள். சூரியன், கரிக்குருவி (வலியன்) பூசித்த தலம். கோயில் பொலிவொடு காட்சி தருகின்றது. இறைவன் - இருதய கமலநாதேஸ்வரர், மனத்துணைநாதர் இறைவி - வாளையங்கண்ணி, அங்கயற்கண்ணி தலமரம் - புன்னை தீர்த்தம் - சங்கரதீர்த்தம் மூவர் பாடல் பெற்ற தலம். கோச்செங்கணான் கட்டிய மாடக்கோயில். சுவாமி செங்குன்றின்மீது (கட்டுமலை மேல்) காட்சி தருகிறார். தேவாரப் பாடல்கள் ஓதத்தொடங்கும் போது பொதுவாக முதலிற் பாடத் தொடங்கும் ‘பிடியதன் உருஉமை கொள’ என்னும் பாடல் இத்தலத்திற்குரியதேயாம். வலியன் (கரிக்குருவி) வழிபட்டதால் வலிவலம் என்ற பெயர் வந்தது. காரணமாமுனிவர் வழிபட்ட பதி. நுழைவு வாயிலில் கணபதி தரிசனம், பிராகாரத்தில் வலம்புரி விநாயகர், சுப்பிரமணியர், இலக்குமி, காசிவிசுவநாதர், நவக்கிரகங்கள் ஆகிய சந்நிதிகள் உள்ளன. அறுபத்துமூவர் சந்நிதி உள்ளது. ஈசானிய மூலையில் பிடாரி கோயில் உள்ளது. இவ்வூர் இறைவனை, இறைவியைப் பற்றிச் சிறப்பித்துக் கூறும் ‘வலிவலமும் மும்மணிக்கோவை’ என்னும் நூலொன்று, “தமிழ்த்தாத்தா” திரு.உ.வே. சாமிநாத ஐயர் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது. அதைப் பாடியவர் பெயர் தெரியவில்லை. அண்மையில் உள்ள தலங்கள்: (1) கச்சனம் (2) கன்றாப்பூர் (3) சாட்டியக்குடி என்பன. இக்கோயிலில் சோழர் காலத்திய ஒன்பது கல்வெட்டுக்கள் படி எடுக்கப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் சித்திரையில் பெருவிழா நடைபெறுகிறது. கந்த சஷ்டித் திருவிழாவும் சிறப்பாக நடைபெறுகிறது. |