திருவிசைப்பா - திருப்பல்லாண்டுத் தலங்கள் | திருவாசகத்திற்கு அடுத்து விளங்கும் திருவிசைப்பா திருப்பல்லாண்டு ஆகிய இரண்டும் முறையாக அமைந்த இசைப்பதிகங்களையுடையனவே. இவைகளை அருளிச் செய்தோர் (1) திருமாளிகைத்தேவர் (2) சேந்தனார் (3) கருவூர்த்தேவர் (4) பூந்துருத்தி நம்பி, காடநம்பி (5) கண்டராதித்தர் (6) வேணாட்டடிகள் (7) திருவாலியமுதனார் (8) புருடோத்த நம்பி (9) சேதிராயர் ஆகிய அருளாளர்கள். இத்திருப்பதிகங்கள் இந்தளம், காந்தாரம், சாளரபாணி, நட்டராகம், பஞ்சமம், புறநீர்மை என்னும் பண்கள் அமைப்பில் அமைந்துள்ளன. இவற்றுள் “சாளரபாணி” என்னும் பண், ஒன்பதாம் திருமுறையுள் மட்டுமே இடம் பெற்றுள்ளது. திருவிசைப்பா திருப்பல்லாண்டுப் பதிகங்கள் : சிவபெருமானின் திருமேனிச்சிறப்பு, அடியார்க்கருளிய அப்பெருமானின் நலங்கள் முதலியவற்றையும் எடுத்துரைப்பதோடு, ஆங்காங்குச் சைவசமயத் தத்துவக் கருத்துக்களையும் புகழ்ந்தோதுகிறது. முருகக்கடவுளைப் பற்றிய ஒரு திருப்பதிகம் இதில் இடம் பெறுகின்றது. (திருவிடைக்கழி) பதிகங்களைப் பாடிய அருளாளர்களின் பெயர்களை நினைவூட்டும் பழம்பாடல் :- “செம்பொன்மணி அம்பலத்து நிருத்தனார்க்குத் திருவிசைப்பா உரைத்தவர்தம் திருப்பேர் சொல்லில் பம்பு புகழ் செறிதிருமா ளிகைமெய்த் தேவர் பரிவுடைய சேந்தனார் கருவூர்த்தேவர் நம்பிகா டவர்கோன்நற் கண்டராதித்தர் நன்குயர்வே ணாட்டடிகள் திருவாலி யமுதர் அம்புவியோர் புகழ்புரு டோத்தமர்சேதி ராயர் ஆகவர் ஒன்பதின்மர் தாமுறை கண்டடைவே” இப்பதிகங்களுக்குரிய தலங்கள் வருமாறு : (1) கோயில் (சிதம்பரம்) (2) கங்கை கொண்ட சோழேச்சரம் (3) களந்தை ஆதித்தேச்சரம் தலம்-56 |