இத்திருக்கோயில் திருப்பனந்தாள் ஸ்ரீகாசி மடத்தின் அருளாட்சிக்கு உட்பட்டது. இவ்வூரில் (1) சுந்தரேஸ்வரர் கோயில் (2) கயிலாயநாதர் கோயில் என்று இரு கோயில்கள் உள்ளன. இவற்றுள் சுந்தரேஸ்வரர் கோயிலே திருவிசைப்பா பாடல் பெற்றதாகக் கொள்ளப்படுகிறது. கோட்டூர் என்னும் திருமுறைப்பாடல் பெற்ற தலம் இதுவன்று, அதுவேறு. கோட்டீர் என்னும் இச்சிறிய கிராமமும் திரைலோக்கிய சுந்தரமும் முதல் இராசராசன் காலத்தில் ஒன்றாக இருந்தது போலும். கருவூர்த்தேவர் இக்கோட்டூரைக் (இன்று ‘துகிலி’ என்று வழங்குகிறது. ‘கோடை’ என்று கொண்டு திருலோக்கியைச் சிறப்பித்து “கோடை திரைலோக்கிய சுந்தரனே” என்று பாடுகின்றார். இத்தொடர் இப்பதிகம் முழுவதும் வருகிறது. தற்போது திருலோக்கி, தனி ஊராக உள்ளது. திரைலோக்கிய மாதேவி என்பவள் முதலாம் இராசராசனின் மனைவியர்களுள் ஒருத்தியாவள். சுவாமி பெயர் சுந்தரேசுவரர். இவையிரண்டும் சேர்ந்து இத்தலத்திற்குத் திரைலோக்கிய சுந்தரம் என்று பெயர் வழங்கியது போலும். முதலாம் இராசேந்திர சோழனின் கல்வெட்டொன்றில் இவ்வூர் திரைலோக்கிய மாதேவிச் சதுர்வேதி மங்கலம் என்று குறிக்கப்பட்டுள்ளது. சிறிய கோயில். கோயிலுக்கு முன்பு (ஸ்ரீ காசி மடத்தின்) இக்கோயிலின் நிர்வாக அலுவலகம் உள்ளது. முகப்பு வாயிலைத் தாண்டி உட்சென்றால் முன் மண்டபத்திலிருந்து நேரே மூலவரைக் காணலாம். இடப்பால் பிராகாரத்தில் சென்றால் (முன் மண்டபத்தில்) திருவிசைப்பா பதிகமும் காசிக் கலம்பகப் பாடலும் பொறித்த கல்வெட்டு கண்ணிற்படுகிறது. பிராகாரத்தில் விநாயகர், வள்ளி தெய்வயானை, சுப்பிரமணியர், நடராசசபை, பைரவர், பிட்சாடனர், சனிபகவான், சூரியன், சந்திரன் ஆகிய சந்நிதிகளும் திருமேனிகளும் கண்டு தொழலாம். வலம் முடித்து உட்புகுந்து மூலவரைத் தரிசிக்கலாம். இறைவன் - சுந்தரேஸ்வரர், சுந்தரம் இறைவி - அகிலாண்டேஸ்வரி தலமரம் - சரக்கொன்றை தீர்த்தம் - லட்சுமி தீர்த்தம் பிருகு முனிவர், தேவகுரு முதலியோர் வழிபட்ட தலம். |