பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 905


     பிராகாரத்தில் அம்பாள் கோயில் தனிக்கோயிலாக உள்ளது. வேதநாயகி
நின்ற கோலத்தில் நான்கு கரங்களுடன் நெடிய உருவில் அருமையான காட்சி
தருகின்றாள். சண்டிகேஸ்வரி மூர்த்தம் வெளியில் இடப்பால் (மண்டபத்தில்)
உள்ளது.

     இக்கோயில் கி.பி. 4-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதென்பர். கோஷ்ட
மூரத்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கை
மூர்த்தங்கள் உள்ளன.

     நித்திய வழிபாடுகள் நன்கு நடைபெறுகின்றன. கோயில் நன்கு
பராமரிக்கப்பட்டு வருகின்றது. சிறிய கோயிலாயினும் தூய்மையாக உள்ளது.

     அண்மையிலுள்ள கீழ்வேளூர், கச்சனம், திருத்துறைப்பூண்டி முதலியவை
திருமுறைத்தலங்களாகும்.

     மாசிமக உற்சவம் இத்தலத்தில் மிகச்சிறப்பாக நடைபெறுகிறது.
நவராத்திரி விழாவும் சிறப்புடையது. நாள்தோறும் நான்குகால வழிபாடுகள்.

     “செம்பொனே பவளக் குன்றமே நின்ற
          திரைமுகம் மால்முதற் கூட்டத்(து)
     அன்பரா னவர்கள் பருகும்ஆ ரமுதே
          அத்தனே பித்தனே னுடைய
     சம்புவே அணுவே தாணுவே சிவனே
          சங்கரா சாட்டியக் குடியார்க்(கு)
     இன்பனே எங்கும் ஒழிவற நிறைந்(து) ஏழ்
          இருக்கையில் இருந்தவா றியம்பே.”

     “செங்கணா போற்றி திசைமுகா போற்றி
          சிவபுர நகருள் வீற் றிருந்த
     அங்கணா போற்றி அமரனே போற்றி
          அமரர்கள் தலைவனே போற்றி
     தங்கள் நான் மறைநூல் சகலமுங் கற்றோர்
          சாட்டியக் குடியிருந் தருளும்
     எங்கள்நா யகனே போற்றி ஏழ் இருக்கை
          இறைவனே போற்றியே போற்றி.”

அஞ்சல் முகவரி :-

     அ/மி. வேதபுரீசுவரர் திருக்கோயில்
     சாட்டியக்குடி - கிள்ளுகுடி அஞ்சல் - 611 109.
     (வழி) தேவூர் - திருவாரூர் வட்டம்.